×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 150 கிராமங்களின் விளை நிலங்களில் விவசாயத்தை சீரழிக்கும் ராட்சத உயர் மின் கோபுரங்கள்

* அத்துமீறி, அச்சுறுத்தி நிலம் அபகரிப்பு
* நியாயமான இழப்பீடாவது கிடைக்குமா?
* கண்ணீர் விட்டு கதறும் விவசாயிகள்

*குரலற்றவர்களின் குரல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், ராட்சத உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் 150 கிராமங்களில் விளை நிலங்கள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நியாயமான இழப்பீடாவது கிடைக்குமா? என விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர்.
விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கிறது திருவண்ணாமலை மாவட்டம். நெல், மணிலா, கரும்பு, வாழை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் இம்மாவட்டத்தின் பிரதான சாகுபடி. விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக நம்பி பெரும்பான்மையாக மக்கள் உள்ளனர். வானம் பொய்த்ததால் வாழ்க்கையில்லை.

வறட்சியும், பெருமழையும் மாறி, மாறி புரட்டிப் போட்டாலும், விவசாயத்தை எப்போதும் கைவிட்டதில்லை. இடுபொருள் விலையேற்றம், சாகுபடி செலவு பன்மடங்கு உயர்வு உற்பத்திக்கேற்ற விலையில்லை, கடன் சுமை என்று சுற்றிச்சுழன்றடிக்கும் துயர பேரலையில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு, அரசின் திட்டங்களும், சட்டங்களும் அடுத்தடுத்து பேரிடியாக அமைந்திருப்பது வேதனையின் உச்சம்.

நாட்டின் வளர்ச்சி எனும் பெயரில், எட்டு வழிச்சாலை, நியூட்ரினோ, மீத்தேன், ைஹட்ரோ கார்பன் என தொடரும் திட்டங்களால், அரசின் அசுர கரங்களில் சிக்கி விளை நிலங்கள் சூறையாடப்படுகின்றன.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு அடுத்த பேரிடியாக இறங்கியிருக்கிறது உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம். அத்தியாவசிய பணி எனும் பெயரில், காவல்துறை மூலம் விவசாயிகளை அச்சுறுத்தி, பயிர் சாகுபடியை அழித்து, விளை நிலங்களில் ராட்சத மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை தடுக்க வழியின்றி, விவசாயிகள் நிலை குலைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம், புகளூர் மின் பகிர்மான மையத்தில் இருந்து, ஆந்திரா, தெலங்கான மாநிலங்கள் வழியாக சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் வரை சுமார் 1,843 கிமீ தூரம் புதிய மின்வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதற்காக, 5,530 உயர்மின் கோபுரங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழித்தடம் மூலம், சுமார் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொண்டுசெல்ல முடியும். பவர் கிரிட் நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக, ₹24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதோடு, புகளூரில் இருந்து ராய்கர், திருவலம், மைவாடி, அரசூர், இடையார்பாளையம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு பவர் கிரிட் நிறுவனத்தின் மூலமாக உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் மூலம், அரசூர் முதல் ஈங்கூர் வரை, மைவாடி இணைப்புத் திட்டம், ராசிபாளையம் முதல் பாலவாடி வரை என்று பல்வேறு உயரழுத்த மின் பாதை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இந்த மின்பாதை திட்டங்களின் பெரும் பகுதி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக தமிழகத்தில் சுமார் 345 கிமீ தூரம் மின்பாதை அமைக்கப்பட உள்ளது.இத்திட்டத்தினால், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 150 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை இழந்து கண்ணீர் சிந்தும் நிலை உருவாகியிருக்கிறது.

ஒரு இடத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க, 40 முதல் 90 மீட்டர் அகலத்தில் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.
அதோடு, மின்கோபுரம் செல்லும் பாதையின் இருபுறமும் சுமார் 33 மீட்டர் தூரம் வரை, எவ்வித பயிர் சாகுபடியும் செய்ய முடியாது. மேலும், மின்கோபுரங்களுக்கு அருகே பாசன கிணறுகள், ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்க முடியாது.

மின் ேகாபுரங்கள் அமையும் விளை நிலத்தில், டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் போன்றவற்றை பயன்படுத்த முடியாது. ஒருசில இடங்களில் கைக்கு எட்டும் உயரத்தில் ராட்சத மின் வயர்கள் தாழ்வாக செல்வது, உயிர் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய தாலுகாக்களில் சுமார் 150 கிராமங்கள் இத்திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நில பரப்பின் வழியாக உயர்மின் கோபுரங்களும், ராட்சத மின் வயர்களும் கடந்து செல்கிறது.

மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக, சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஒப்புதல் பெறவில்லை. எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை. நிலம் கையகப்படுத்தும் விபரம், இழப்பீடு தொகை போன்ற எந்த விபரங்களும் தெரிவிக்கவில்லை.விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, முறையான அனுமதியின்றி, போலீஸ் அச்சுறுத்தலுடன், விளை நிலங்களில் அத்துமீறி மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக நடந்த எந்த போராட்டத்தையும், இது வரை அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.

மின்கோபுரம் அமைக்க கையகப்படுத்தும் நிலத்தின் சந்தை மதிப்பை கணக்கிட்டு, மூன்றரை மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும், விளை நிலத்தின் மீது மின் தடம் செல்லும் தூரத்தை கணக்கிட்டு, சந்தை மதிப்பில் 20 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த ஒரு விவசாயிக்கும் இழப்பீடு வழங்கவில்லை. மின்ேகாபுரம் அமைவதால் சேதப்படுத்தப்படும் பயிர் சேதத்துக்கு மட்டுமே விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் முறையாக, முழுமையாக அனைத்து விவசாயிகளுக்கும் சேரவில்லை.

எனவே, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, அரசு நிர்ணயித்துள்ள இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விளை நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகள் பாதிக்காத வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சோறு போடும் விவசாயத்தை அழித்துவிட்டு, வேறெந்த வளர்ச்சியும் மனித இனத்தை காப்பாற்றிவிட முடியாது என்பதை அரசு உணர வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்பதுதான் அரசின் முதன்மையான பணி என்பதை புரிந்துகொண்டு அரசு செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மின் பாதை அமைக்க மாற்று திட்டம் இல்லையா?

மொத்த மின் உற்பத்தியில், சுமார் 30 சதவீதம் வரை ‘லைன் லாஸ்’ எனப்படும் கம்பி வழித்தட இழப்பினால் பறிபோகிறது. எனவே, கம்பி வழித்தடங்களுக்கு மாற்றாக, நிலத்துக்கு அடியில் புதை மின் வழித்தடம் அமைப்பதுதான் இழப்பை சரி செய்ய சிறந்த வழி. ஆனால், பல மாநிலங்களை கடந்து மின்சாரத்தை கம்பி வழித்தடம் மூலம் கொண்டுசெல்லும் இத்திட்டத்தால், மிகப்பெரிய அளவில் மின் இழப்பு ஏற்படும்.

எனவே, சாலையோரங்களில் பூமிக்கடியில் புதை மின்வழித்தடம் அமைத்து மின்சாரம் கொண்டுசென்றால், மின் இழப்பு தவிர்க்க வாய்ப்பு உள்ளது. அதனால், விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. வேளாண் சாகுபடி பாதிக்காது. புதை மின்வழித்தடம் அமைக்க கால தாமதம் ஆகும். பன்மடங்கு செலவாகும் என்பதால், இந்த முயற்சியை அரசு தவிர்ப்பதாக கூறப்படுகிறது. எனவே, உயர்மின் ேகாபுரங்கள் அமைப்பதற்கு மாற்றான முயற்சிகளையும், திட்டங்களையும் வல்லுநர் குழு அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

மாத வாடகை வழங்கப்படுமா?

தமிழகத்தில் உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு கொண்டுசெல்லவும், தேவைப்படும் நேரங்களில் தனியாரிடம் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கவும் புதிய மின்வழித்தடம் அமைக்கப்படுகிறது.புதிய மின்தடங்களின் வழியாக மின்சாரத்தை பகிர்ந்து கொள்வதில் சேவை நோக்கம் மட்டுமின்றி, வணிக நோக்கமும் உள்ளது. மேலும், மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின்சாரம் மிகப்பெரும் வியாபார பொருளாக மாறிவிட்டது.

எனவே, தனியார் நிலங்களில், கட்டிடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைத்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மாத வாடகை வழங்குவது போல, உயர்மின் கோபுரம் அமையும் நிலத்தின் உரிமையாளருக்கு மாத வாடகையை மின்பகிர்மான கழகம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும். நிலத்தை கையகப்படுத்த, ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் இழப்பீடு நியாயமானதாவும், போதுமானதாகவும் இல்லாத நிலையில், மாதாந்திர வாடகை ஒப்பந்தம் செய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நெல் சாகுபடி சரியும் ஆபத்து

திருவண்ணாமலை மாவட்டத்தில், உயர்மின் கோபுரங்கள் அமையும் பெரும்பாலான விளை நிலங்கள், நெல் விளையும் பூமியாகும். தமிழகத்தில் நெல் உற்பத்தியில் டெல்டா மாவட்டங்களுக்கு இணையாக உள்ள இந்த மாவட்டத்தில், 8-வழிச்சாலை, உயர்மின் கோபுரங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களால் சாகுபடி பரப்பு சரியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இத்திட்டங்களுக்காக சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்துவது, அவர்களின் உரிமையை, நில உடமையை அபகரிக்கும் செயலாகும். அதோடு, உயர் மின்கோபுரம் அமையும் விளை நிலத்தை சுற்றி அமைந்துள்ள நிலத்தின் சொத்து மதிப்பும் இதனால் குறையும். மின்கோபுரம் அமைந்த இடத்தை சொத்து பகிர்மானம் செய்வதில், உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

மேலும், விளை நிலத்தை பறிகொடுக்கும் விவசாயிகள், பிழைப்புக்காக கிராமத்தை விட்டு வெளியேறி, பெரு நகரங்களுக்கு கூலிகளாக இடம் பெயரும் நிலை இனி வரும் காலங்களில் ஏற்படும். எனவே, இதுபோன்ற நடைமுறை பாதிப்புகளை அரசு கனிவுடன் பரிசீலனை செய்ய வேண்டும்.

Tags : lands ,villages ,Thiruvannamalai district , Thiruvannamalai: In the Thiruvannamalai district, 150 villages are in danger of extinction due to the construction of giant towers.
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...