செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் உடைந்த இருக்கைகள் ஆக்கர் கடையில் விற்பனை

ஆரல்வாய்மொழி : செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள உடைந்த பர்னிச்சர்கள் ஆக்கர் கடைக்கு போடப்பட்டுள்ளது. இது மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிந்து தான் நடந்ததா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 செண்பகராமன்புதூரில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் செண்பகராமன்புதூர், கண்ணன்புதூர், சமத்துவபுரம், போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால்   தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

இப்பள்ளி வளாகத்தில்  பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளியின் மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த உடைந்த மர பர்னிச்சர்கள், இரும்பு பர்னிச்சர்கள், மேலும் சில பொருட்களை நேற்று முன்தினம் மினி டிம்போவில் ஏற்றி செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள ஆக்கர் கடையில் போட்டுள்ளனர். அரசு பள்ளியில் உள்ள அரசுக்கு சொந்தமான பொருட்களை வாகனத்தில் ஏற்றி விற்பனை செய்துள்ளது, இப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி செண்பகராமன்புதூர் ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் கூறும்போது, இப்பள்ளியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இடிக்கப்பட்ட கட்டிடத்தில் தான் தற்போது ஆக்கர் கடைக்கு அனுப்பப்பட்ட உடைந்த பர்னிச்சர்கள் கிடந்தன.  அதனை அப்புறப்படுத்தும் போது தலைமை ஆசிரியர் இப்பொருட்கள் அனைத்தும் மாவட்ட கல்வி அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதன் பின் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உடைந்த பர்னிச்சர்களை வேறு ஒரு அறையில் வைத்து பூட்டினார்.

ஆனால் தற்போது இடிக்கப்படும் கட்டிடத்தின் ‍‍பொருட்களை அப்புறப்படுத்துவதை சாதகமாக பயன்படுத்தி, பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்படாதவாறு அனைத்து உடைந்த அரசுக்கு சொந்தமான பர்னிச்சர்களையும் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள ஆக்கர் கடையில் விற்பனை செய்துள்ளனர். இது மாவட்ட கல்வி அதிகாரிக்கு தெரிந்து தான் நடந்ததா? அல்லது அவ்வாறு தெரிந்து நடந்தால் முறையான ஒப்பந்தத்தின் அடிப்படையில்  விற்பனை செய்யப்பட்டதா என தெரியவில்லை. அரசு பள்ளியில் உள்ள பொருட்கள் ஆக்கர் கடையில் போடப்பட்டுள்ளது இப்பகுதி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>