மதுரை அரசு மருத்துவமனையில் ஆங்கிலேயர் கால கல் கட்டிடம் இடிப்பு-ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை கூடம் அமைகிறது

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் ஆங்கிலேயர் கால கல் கட்டிடம் இடிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை கூடத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன.மதுரை கலெக்டர் அலுவலகம், ஏ.வி. மேம்பாலம், முதன்மைக்கல்வி அலுவலகம் ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1905 முதல் 1940க்குள் கட்டப்பட்டவை.

1916ல் கட்டப்பட்ட மதுரை கலெக்டர் அலுவலகம், 105 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கம்பீரமாக காட்சி தருகிறது. அதேபோன்று, மதுரை அரசு மருத்துவமனையில் 1940ல் ‘ப’ வடிவத்தில் கல் கட்டிடம் கட்டப்பட்டது.தற்போது மருத்துவமனை வளாகத்தில், ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த அறுவைச்சிகிச்சை கூடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இடத்தை ஜப்பான் நாட்டின் நிபுணர் குழுவினர் பார்வையிட்டு கல் கட்டிட பகுதியை தேர்வு செய்தனர். ரூ.325 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை கூடம் அமைப்பதற்கான பணிகளுக்காக, கடந்த 3 நாட்களாக கட்டிட இடிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘ஆங்கிலேயர்கள் கட்டிய இந்த கட்டிடம் சேதம் எதுவுமின்றி தற்போது வரை கம்பீரமாக நின்றது.

பவள விழா கொண்டாடிய இந்த கட்டிடத்தை இடிக்காமல், மருத்துவமனை வளாகத்தில் வேறு இடத்தில் ஒருங்கிணைந்த அறுவைசிகிச்சை கூடத்திற்கான கட்டுமான பணியை துவங்கி இருக்கலாம். பழமையை காக்க தவறியது வேதனை தருகிறது’’ என்றனர்.

7 தளங்களில் கட்டிடம்

புதிய அறுவைச்சிகிச்சை கூடத்தில், 26 அறுவைச்சிகிச்சை அரங்குகள், எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் போன்றவை அமைய உள்ளன. கட்டிடம் கட்டுவதற்கு ரூ.150 கோடி, அறுவைச் சிகிச்சை அரங்குக்கான உபகரணங்களுக்கு ரூ.175 கோடியை ஜப்பான் நாடு ஒதுக்கியுள்ளது. கட்டுமானப் பணியும் அந்நாட்டு குழுவினரின் மேற்பார்வையில் நடைபெற உள்ளது. 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் வாகன நிறுத்துமிடம், 600 பேர் அமரும் கருத்தரங்கு கூடம், சலவைக்கூடம் உள்பட பல்வேறு நவீன வசதிகள் அமைக்கப்பட உள்ளது.

Related Stories:

>