×

ஆன்லைன் கடன் செயலிகள் கடனை வசூலிக்கும் முறை சரியல்ல!: ரிசர்வ் வங்கியின் ஆளுநர், கூகுள் நிறுவனம் பதில்தர ஐகோர்ட் கிளை நோட்டீஸ்..!!

மதுரை: கடன் செயலிகளை தடை செய்ய கோரிய வழக்கில் கூகுள் நிறுவனம் பதில் தர ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், வளர்ந்து வரும் நவீன உலகத்தில் செல்போன் பயன்பாடு என்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இதனை பயன்படுத்தி சில சமூக விரோத கும்பல்கள் பல்வேறு வகையில் மக்களை துன்புறுத்தி வருகின்றனர். குறிப்பாக தற்போது கடன் வழங்கும் செயலி என்பது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் செயல்பாட்டில் உள்ளது. இந்த செயலியை நம்பி பல்வேறு இளைஞர்கள் கடன் பெறுகின்றனர். இவ்வாறு கடன் பெறக்கூடிய இளைஞர்கள் எந்தவிதமான விதிமுறைகளையும் படித்து பார்க்காமல் கடன் பெற முற்படுகின்றனர். இதன் காரணமாக கடன் வழங்கக்கூடிய நிறுவனங்கள், கடன் தொகைகளை வசூல் செய்வதில் ஏற்கமுடியாது விதிகளை பின்பற்றுகின்றனர். அதிக வட்டி விதிக்கின்றனர்.

கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தாவிடில் மிகவும் கடுமையாக நடந்துகொள்கின்றனர். மேலும் அவர்களது செல்போனில் உள்ள நம்பர்களை டயல் செய்து மற்றவர்களிடம் அவதூறாக பேசுகின்றனர். இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. எனவே ரிசர்வ் வங்கியின் எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் இதுபோன்ற பண பரிவர்த்தனைகளில் ஈடுபடுகின்ற செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வழக்கறிஞர் கண்ணன் என்பவர் ஆஜராகி, கூகுள் நிறுவனம் மூலம் 50க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் முற்றிலும் இந்திய சட்டதிட்டங்களை பின்பற்றுவதில்லை. இது இந்தியர்களுடைய அந்நிய செலவாணிகளுக்கு மிகப்பெரிய மோசடி திட்டமாகும். எனவே உடனடியாக நீதிமன்றம் இதுபோன்ற கடன் செயலிகளுக்கு தடை விதித்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வெளிநாட்டு கடன் செயலி மூலம் இந்தியாவிற்குள் சமூக விரோத சக்திகள் நுழைய வாய்ப்புள்ளது. கடன் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது வருத்தத்திற்குரியது. கடன் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வது இந்தியாவில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கடன் செயலிகள் கடனை வசூலிக்க 3ம் தர நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்க இயலாது. சட்டம் ஏற்கும் வகையில் கடன் செயலிகள் இல்லை என்று கண்டனம் தெரிவித்தனர். எனவே இதனை அனுமதிக்கக்கூடிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், கூகுள் நிறுவனம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags : Credit Processors ,Governor ,Reserve Bank , Credit Processor, Governor of the Reserve Bank, Google, Icord Branch, Notice
× RELATED 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த...