×

பொங்கல் பரிசுத் தொகுப்பு!: நியாயவிலை கடை முன்பாக வைக்கப்படும் அ.தி.மு.க பேனர்களால் விபத்து ஏற்படும் ஆபத்து..திமுக வழக்கறிஞர்கள் புகார்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நியாயவிலை கடைகள் முன்பாக பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆளுங்கட்சியினர் பேனர் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதை குறிப்பிட்டு நியாயவிலை கடை அருகில் பெரிய அளவில் பேனர்கள் மற்றும் பிளக்ஸ்சுகளை அ.தி.மு.க-வினர் வைத்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சாலையின் இருபுறமும் பேனர்கள் மற்றும் கொடிகளை வைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அ.தி.மு.க-வினர் மீறுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும், ஒட்டஞ்சத்திரம் மாவட்ட துணை கண்காணியாளாரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலை இப்படியே நீடித்தால் பல உயிர்களை பலிவாங்கக்கூடிய ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். பொதுமக்களின் உயிர்கள் மீது அக்கறை இல்லாத அதிமுக அரசு, உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும். அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் ஆளுங்கட்சியினருக்கு துணை போகாமல் மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று திமுக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மற்றும் கோவையில் ஆளுங்கட்சியினர் வைத்திருந்த பேனர்கள் விழுந்து மென்பொருள் பொறியாளர்கள் இருவர் பலியானார்கள்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து திமுக கூட்டங்களுக்கு பேனர்கள், பிளக்ஸ் வைக்கக்கூடாது என்று அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பேனர் வைக்கப்படாது என திமுக, அதிமுக கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நியாயவிலை கடைகள் முன்பாக பொதுமக்களை அச்சுறுத்தும்  வகையில் ஆளுங்கட்சியினர் பேனர் வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : DMK ,price shop ,lawyers ,accident , Pongal Gift Collection, Fair Price Shop, ADMK Banner, Accident
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...