எக்ஸ்போர்ட் நிறுவன பஸ் கவிழ்ந்து 30 பெண் தொழிலாளர்கள் படுகாயம்: திருத்தணி அருகே பரபரப்பு

திருத்தணி: திருத்தணி அருகே தனியார் நிறுவன பஸ் கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். திருத்தணி பைபாஸ் சாலையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் பணியாற்றி வருகின்றனர். கம்பெனி பஸ்கள் மூலம் அனைவரும் வேலைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று காலை பள்ளிப்பட்டில் இருந்து நகரி வழியாக இந்த கம்பெனிக்கு 50க்கும் மேற்பட்ட பெண்கள் பஸ்சில் அழைத்து வரப்பட்டனர். பேருந்தை சுரேஷ் ஓட்டிவந்தார். பொன்பாடி சோதனை சாவடி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திடீரென சாலையில் கவிழ்ந்தது. பஸ்சுக்குள் சிக்கிய பெண்கள் கூச்சலிட்டனர்.

அப்போது அக்கம்பக்கத்தினர் மழை பெய்துகொண்டு இருந்ததால் அவர்களை மீட்க சிரமப்பட்டனர். பின்னர் சிலர் வந்து பஸ்சுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். கை, கால்களில் பலத்த காயம் அடைந்த அவர்கள் வலியால் துடித்தனர். இதில் பள்ளிப்பட்டு நகரி பகுதியை சேர்ந்த ரேகா(32), சுவேதா(24), கீதாஞ்சலி(31), அஸ்வினி(26), மகேஸ்வரி(30), சுபாசினி(34), செம்பருத்தி(27), ஜான்சி(25), சம்சா(20) உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரக்கோணம், திருத்தணி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>