×

ரூ.971 கோடி செலவிலான புதிய நாடாளுமன்றம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது உட்பட ரூ.20 ஆயிரம் கோடியில் செயல்படுத்த உள்ள மத்திய அரசின் ‘விஸ்டா’ திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்ற கட்டிடம் உட்பட ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து, இந்தியா கேட் வரையிலான பகுதிகளை, ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில் மறுசீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முக்கியமாக, புதிய நாடளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கு மட்டுமே ரூ.971 செலவில் திட்டமிட்டுள்ளது. இப்பணியை 2022-ம் ஆண்டுக்குள் முடித்து, 75வது சுதந்திர தினத்தன்று நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை நடத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு கடந்த மாதம் 10ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு தடை விதிக்கும்படி கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தனி நபர்கள், அமைப்புகள் சார்பில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. அதில், ‘புதிய நாடாளுமன்ற பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை. அதனால், இப்பணிக்கு தடை விதிக்க வேண்டும்,’ என கூறப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிபதி கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மத்திய அரசிடம் இருந்து பல்வேறு கேள்விகளையும், விளக்கங்களையும் கேட்டது. அதன்படி, இத்திட்டம் தொடர்பான விளக்கங்களை மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, கடந்த விசாரணையின்போது தாக்கல் செய்தார்.

அதில், ‘புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி உட்பட மத்திய அரசின் விஸ்டா திட்டங்கள் அனைத்திற்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு, அனைத்து சட்ட நடைமுறைகளும் கண்டிப்பாக பின்பற்றப்படும். மேலும், இத்திட்டத்தை செயல்படுத்தும் போது இயற்கையை பாழாக்கும் விதமாக மரங்களை வெட்டுவது போன்ற எந்த சம்பவங்களும் நடக்காது,’ என கூறப்பட்டு இருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த நவம்பர் 5ம் தேதி ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் கன்வில்கரும், தினேஷ் மகேஸ்வரியும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். அதில்  அவர்கள், ‘புதிய நாடாளுமன்ற கட்டிடம் உட்பட மத்திய அரசின் விஸ்டா திட்டத்தை செயல்படுத்த எந்த தடையும் இல்லை. அதற்கு முழுமையாக அனுமதி வழங்கப்படுகிறது. அது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையும் செல்லும். இந்த விவகாரத்தில் பின்பற்றப்பட்டுள்ள சட்ட விதிமுறைகள் அனைத்தும் சரியானவையே. இதற்காக பெறப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியும் போதுமானதுதான். அதன் பரிந்துரைகளையும் நீதிமன்றம் ஏற்கிறது. அதனால், திட்டத்தை தொடரலாம்.

இருப்பினும், கட்டிடம் கட்டும் பணிகளை மேற்கொள்ளும் போது அதிக மாசு ஏற்படாதபடி, ‘ஸ்மோக் கன்ஸ்’ எனப்படும் கட்டிட மாசுகளை உறிஞ்சும் இயந்திரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக, கட்டிடப் பணிகளை தொடங்கும் முன்பாக, தொல்லியல் மற்றும் புராதன சின்னங்கள் தொடர்பான துறைகளிடம் கண்டிப்பாக அனுமதிப் பெற வேண்டும். இவை தற்போது வரை அரசு தரப்பில் வாங்கப்படாமல் உள்ளது. அதை அரசு உடனடியாக பெற வேண்டும் என உத்தரவிடப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மட்டும், ‘இத்திட்டங்களுக்கு எப்படி அனுமதி அளிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பி, மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இருப்பினும், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த அனுமதியின் காரணமாக, புதிய நாடாளுமன்றம் உட்பட மத்திய அரசின் விஸ்டா திட்டத்திற்கான பணிகள் அனைத்தும் உடனடியாக தொடங்கப்படுவதற்கான அனுமதி உறுதியாகி இருக்கிறது.

* எப்படி அனுமதி வழங்க முடியும்?
நீதிபதி சஞ்ஜீவ் கன்னா வழங்கிய மாறுபட்ட தீர்ப்பில், ‘இந்த திட்டங்களுக்கு தொல்லியல், புராதன சின்னங்கள் தொடர்பான அனுமதிகள் பெறப்படவில்லை. அதேபோல், பொதுமக்களிடம் பெறப்பட்ட கருத்து கேட்பும் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இவ்வளவு முக்கிய பிரச்னைகள் இருக்கும்போது, எப்படி மத்திய அரசின் விஸ்டா திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியும்?’ என கூறியுள்ளார்.


Tags : Supreme Court ,parliament , Supreme Court approves Rs 971 crore new parliament
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...