தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: இலங்கை அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தென் ஆப்ரிக்கா - இலங்கை அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 45 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் வாண்டரர்ஸ் மைதானத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 157 ரன்னுக்கு சுருண்ட நிலையில், தென் ஆப்ரிக்கா 302 ரன் குவித்தது. டீன் எல்கர் 127, வாண்டெர் டுஸன் 67 ரன் விளாசினர்.

145 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை, 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்திருந்தது. நேற்று அந்த அணி மேற்கொண்டு 61 ரன் சேர்த்து 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் கருணரத்னே 103, திரிமன்னே 31, டிக்வெல்லா 36, வணிந்து டிசில்வா 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர் (3 பேர் டக் அவுட்). தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் என்ஜிடி 4, சிபம்லா 3, நோர்ட்ஜ் 2, முல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 67 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 13.2 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 67 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. மார்க்ராம் 36, எல்கர் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியுடன் தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை டீன் எல்கர் தட்டிச் சென்றார்.

Related Stories:

>