×

சுவேந்துவை தொடர்ந்து மே.வங்கத்தில் மற்றொரு அமைச்சர் ராஜினாமா: மம்தாவுக்கு அடுத்த அதிர்ச்சி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதில் அமைச்சராகவும், மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்த சுவேந்து அதிகாரி, கடந்த மாதம் 17ம் தேதி தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜ.வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, இக்கட்சியை சேர்ந்த பல எம்எல்ஏ.க்களும் பாஜ.வில் இணைந்தனர். இதனால், மம்தாவின் திரிணாமுல் காங்கிரசில் சலசலப்பு நிலவுகிறது.

இம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில், திரிணாமுல் காங்கிரசை உடைக்கும் பாஜ.வின் வேட்டை தீவிரமாகி இருக்கிறது. இதன் அடுத்தக்கட்டமாக, இம்மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா நேற்று தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்து, மம்தாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இவர், ஹவுரா தொகுதியில் இருந்து எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் விளையாட்டுக்காக அதிக நேரம் ஒதுக்க விரும்புவதால், அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக தெரிவித்துள்ளார். அதே நேரம், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. இவர், மேற்கு வங்க ரஞ்சி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் அடுத்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணம் மேற்கொள்கிறார். அப்போது, அவர் முன்னிலையில் சுக்லாவும் பாஜ.வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Sweden ,Mamata , Another minister resigns in May following Sweden: The next shock for Mamata
× RELATED நார்வே, டென்மார்க், சுவீடன் ஆகிய...