×

பனை பொருட்களில் கலப்படம் உறுதி: தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கொட்டங்காட்டைச் சேர்ந்த சந்திரசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘உடன்குடி, வேம்பார் பகுதி பனை வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு பிரசித்தி பெற்றவை. இதை தவறாக பயன்படுத்தும் சிலர் சர்க்கரை பாகு, சர்க்கரை ஆகியவற்றோடு சில ரசாயனங்களைச் சேர்த்து கலப்படம் செய்து விற்கின்றனர். இதனால் பாதிப்பு ஏற்படும். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்க தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். வக்கீல் ராஜீவ் ரூபஷ் ஆஜராகி, ‘‘சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை சேர்த்து கருப்பட்டி தயாரிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. இது தயாரிப்பில் கலப்படத்தை உருவாக்கவே வழி வகுக்கும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘பனைவெல்லம் மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றில் கலப்படம் இருப்பது தெரிய வருகிறது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து உணவுப்பாதுகாப்பு துறை கமிஷனர் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும்’’ என கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : Government , Palm products, impurity, iCord branch, question
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...