×

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி விஷயத்தில் தமிழக அரசு நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: அரசியல் தலைவர்கள் கருத்து

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் ஊரடங்கில் தளர்வும் அறிவிக்கப்பட்டது. எனினும்  அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், கல்லூரி, பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குரல் எழுப்பியதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மாதம் தியேட்டர்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அப்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி  வழங்கப்பட்டது. ஆனால் போதிய வருமானம் இல்லாததால் பல தியேட்டர்களை அதன் உரிமையாளர்கள் திறக்கவில்லை. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தால் மட்டுமே தியேட்டர்களில் வருமானம் கிடைக்கும் என்று அதன் உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் மூலம் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தற்போதுள்ள உருமாறிய கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் வாய்ப்புள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பது ஆபத்தானது என ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுரும் மறைமுகமாக தமிழக அரசை எச்சரித்துள்ளார். இதனால் பள்ளி திறப்பு கூட தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மூடிய அறைக்குள் 3 மணி நேரத்துக்கு மேலாக நெருக்கமாக மக்கள் இருக்கும்பட்சத்தில் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனவே தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: தியேட்டர்களை பொறுத்தவரை ஏசி இருக்கும். நெருக்கமான சீட்டாக தான் இருக்கும். 100 சதவீதம் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. கொரோனா இன்னும் முற்றாக தீரவில்லை. பள்ளிகளில் கூட சமூக இடைவெளிவிட்டு மாணவர்களை அமர வைக்கலாம். ஆனால் அவற்றை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யாத நிலையில், திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் வருவார்கள். இப்போது கொரோனா அச்சத்தால் மக்கள் வருவார்களா என்பதும் கேள்விகுறி தான். இது குழப்பான ஒரு முடிவாகத் தான் உள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள் 50 சதவீத இருக்கைகள் என்பது கட்டுபடியாகவில்லை என்கிறார்கள். அரசு எல்லாவற்றையும் வேக வேகமாக தளர்த்தி கொண்டு செல்கிறது. சிலவற்றை கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

தியேட்டர்களில் 3 மணி நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நோய் தொற்றுக்கு வாய்ப்பளிக்கும். அத்தியாவசிய தேவையாக இருந்தாலும் பரவாயில்லை. இது அப்படி ஒன்றும் அத்தியாவசியம் இல்லை. இல்லையேன்றால் குறிப்பிட்ட அளவுக்கு தியேட்டர்களை திறந்து அதன் மூலம் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை அறிந்த பின்பு அதற்கு பிறகு கூட படிப்படியாக முடிவெடுக்கலாம். அதை விடுத்து மொத்தமாக திறப்பது சரியாகப்படவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. திரையரங்குகளுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி விட்டனர். இன்னும் ஏன் 144 தடை உத்தரவு இருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்பதற்கு தான் தடை உத்தரவு. அதை இன்னும் ரத்து செய்யவில்லை.

அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தலாம். ஆனால் 50 சதவீதம் தான் கலந்து கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் மக்கள் அதில் எப்படி பங்கேற்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் அரசு சொல்வது 50 சதவீதம் தான். நடைமுறையில் இது சாத்தியமில்லாத ஒன்று. டாஸ்மாக் கடைகளில் பல விதிகளை சொன்னார்கள். அதையெல்லாம் எங்கேயாவது கடைபிடிக்கிறார்களா?. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ₹2500 பணம் எங்களிடம் வந்து விடும் என்று சொன்னது உண்மை தான். அது தான் நடக்கிறது. திரைப்பட துறையில் உள்ளவர்கள் திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்று ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கின்றனர். அதற்குட்பட்டு தான் திறந்திருக்கலாம்.

அதேநேரம் ஒரு அரங்குக்குள் கதவை சாத்தி ஏசி போடாமல் இருக்க முடியாது. ஏசி கொரேனாவுக்கு நேர் எதிரானது. வெறும் பேன் மட்டும் போட்டு திரையரங்குகளில் இருக்க முடியாது. புழுக்கம் கொசு கடி என பல பிரச்னைகள் இருக்கும். கொரோனா பாதிப்பு முடியாத ஒரு சூழலில் இதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசனை பண்ணி முடிவெடுப்பது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : government ,Tamil Nadu ,leaders , Theaters, Permission, Political Leaders, Opinion
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...