×

சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் நீர்மட்டம் உயர்ந்ததால் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு: கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றம்

சென்னை: வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. குறிப்பாக, 21.20 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 21.10 அடியாகவும், 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 23.37 அடியாகவும், 35 அடியாக உள்ள பூண்டி ஏரியில் 34.96 அடியாகவும் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து இந்த ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று பிற்பகல் 2 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. மாலை 4 மணியளவில் 3180 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், அடையாற்றில் ஏற்கனவே பாய்ந்து ஓடிய மழை நீருடன், செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது.

இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.அதே போன்று, 21.20 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் மட்டம் 21.10 அடியாக உயர்ந்தது. இதை தொடர்ந்து, நேற்று பிற்பகல் 1 மணியளவில் முதற்கட்டமாக 500 கன அடி வரை திறக்கப்பட்டன. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 3082 கன அடியாக நீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து 4 மணியளவில் 1500 கன அடியாகவும், 6 மணியளவில் 1480 கன அடியாகவும் திறக்கப்பட்டன.

இதை தொடர்ந்து, நாரவாரிகுப்பம், வடகரை, கிரான்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 34.96 அடியாக உயர்ந்தது. இதனால், மாலை 6 மணியளவில் 3413 கன அடியாகவும் தண்ணீர்
திறக்கப்பட்டது.


Tags : lakes ,evacuation ,Poondi ,Sembarambakkam ,Chennai ,lying areas , Chennai, heavy rain, people, evacuation
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!