×

நட்சத்திர ஓட்டல் பணியாளர்கள் 136 பேருக்கு கொரோனா: பறவை காய்ச்சலை தடுக்கவும் போர்க்கால நடவடிக்கை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தலைமை கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழக மருத்துவ சேவை கழகம் மூலம் தமிழகம் முழுவதும் 51 கிடங்கு தயாராக உள்ளது. 2.5 கோடி தடுப்பூசிகள்  சேமித்து வைக்க முடியும். அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி அளிக்கப்படும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தடுப்பூசியை கொண்டு ெசல்ல 2850 கோல்ட் பாயின்ட்கள் தயார் நிலையில் உள்ளன.

இதுவரை லண்டனில் இருந்து வந்த 20 மற்றும் தொடர்பில் இருந்த 24 பேர் என்று மொத்தம் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 32 பேரின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. பறவை காய்ச்சல் தடுக்க கேரளாவை ஒட்டி உள்ள 6 மாவட்ட சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை செய்யப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

15ம் தேதி முதல் சென்னையில் ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 8,449 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 4611 பேரின் முடிவுகள் வந்துள்ளன. இதில் 136 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 மணி நேரத்தில் கொரோனா முடிவு அளிக்கப்படுகிறது. மழைக்காலம் என்பதால் டெங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 5 மடங்கு டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது. தடுப்பூசி ஒத்திகை தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சப்ளை செய்தவுடன் பாதுகாப்பான முறையில் அனைவருக்கும் அளிக்கப்படும். வழிகாட்டு நெறிமுறைகளின் படிதான் தியேட்டர்கள் 100 சதவீதம் இருக்கைகளோடு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையிடம் ஆலோசிக்கப்படும்


Tags : Corona ,Radhakrishnan ,136 Star Hotel , Star Hotel, Staff, Corona, Health Secretary, Radhakrishnan, Interview
× RELATED சொத்து, தொழில் வரி வசூல் மையங்கள் 29...