×

பழநி பாதயாத்திரை பக்தர்கள் நலன்வேண்டி ஹோமம்

பழநி: தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் நலன் வேண்டி பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர். கொரோனா காரணமாக பழநி கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் நலன் வேண்டி மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகர் கோயிலில் நேற்று கணபதி ஹோமம் நடந்தது.

ஆனந்த விநாயகர் சன்னதி முன்பு தீர்த்தங்கள் உள்ள கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு ஹோமம் நடந்தது. இதனைத்தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலசத்தில் இருந்த தீர்த்தங்கள் கொண்டு விநாயகருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரங்களும் நடந்தன. பழநி கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியர்கள் பூஜைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Homam ,devotees ,Palani Pathayathri , Homam for the benefit of Palani Pathayathri devotees
× RELATED செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோமம்