×

திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொட்டியது மழை... மூழ்கியது பயிர்கள்: விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு: வடகிழக்கு பருவமழையால் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம்,  செய்யூர், கல்பாக்கம், திருப்போரூர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களிலும் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே நீர்நிலைகளான ஏரி, குளம், குட்டைகள்  நிரம்பியுள்ள நிலையில் மீண்டும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த மழையால், இன்று காலையில், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள்,  வியாபாரிகள், பொதுமக்கள் பணிக்கு செல்ல முடியாமல் பெரிதும்  பாதிக்கப்பட்டனர். மேலும் பருவமழையால் பயிரிடப்பட்டிருந்த ஹெக்டேர் கணக்கில்  பயிரிடப்பட்டிருந்த வேர்கடலை, வெண்டை, கத்தரி, காராமணி, உழுந்து உள்ளிட்ட பயிர்கள் சேதமானது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மதுராந்தகம் பகுதியிலும் கனமழை பெய்து  வருவதால் வயல்வெளியில் தண்ணீர் தேங்கியுள்ளது. மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கணக்கான ஏக்கர்களில்  அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கிவிட்டதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

மார்கழி மாதத்தையொட்டி பல நூறு ஏக்கர் நிலத்தில் வேர்க்கடலை விதைத்திருந்தனர். தற்போது பெய்துவரும் மழையினால் வேர்க்கடலை அழுகி வீணாகிபோயுள்ளது. முளைத்த செடிகளும் தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிட்டது. தர்பூசணி நடவு  செய்த விவசாயிகளும் திடீரென பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம், கருணாகரவிளாகம் பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களாக, விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வெப்பத்தால் தவித்து வந்த மக்களுக்கு அவ்வப்போது பெய்து வரும் மழையால் சூடு தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவி வருகிறது. நேற்று  நள்ளிரவிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதே நேரத்தில் விவசாய பயிர்கள், மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மாவட்டத்தில், இன்று காலை நிலவரப்படி செங்குன்றம், சோழவரம் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 33 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையளவு மி.மீட்டரில் விவரம் வருமாறு: திருவள்ளூர்- 15, ஊத்துக்கோட்டை- 15, பூந்தமல்லி- 7,  ஜமீன்கொரட்டூர்- 3, கும்மிடிப்பூண்டி- 11, திருவாலங்காடு- 9, திருத்தணி- 5, ஆர்கே.பேட்டை- 3, பொன்னேரி- 12, செங்குன்றம்- 33, சோழவரம்- 33, பூண்டி- 14, தாமரைப்பாக்கம்- 28, மொத்தம்- 188 மி. மீட்டர்.



Tags : Tiruvallur ,districts ,Chengalpattu , Tiruvallur, Chengalpattu districts received heavy rains ... Submerged crops: Farmers suffering
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு