பிரியங்காவின் குரல் ஓங்கும் போது எனக்கு பிரச்னை வரும்: ரெய்டு குறித்து கணவர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: விவசாயிகளுக்கு உதவ பிரியங்கா காந்தி களத்தில் இறங்கும் போதும், பிற பிரச்னைகளுக்காக அவர் குரல் எழுப்பும்போதும், எனக்கு எதிராக நடவடிக்கை இருக்கும் என்று அவரது கணவர் ராபர்ட் வதேரா கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது பினாமி சொத்து தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக வருமானத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ராபர்ட் வதேராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராவில்லை. இதையடுத்து, நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி சுவ்தேவ் விகார் பகுதியில் உள்ள ராபர்ட் வதேராவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து ராபர்ட் வதேரா கூறுகையில், ‘நான் வரி ஏய்ப்பு செய்யவில்லை. எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் போதெல்லாம், அதற்கான பதிலையும் அளித்துள்ளோம்.

விசாரணை அமைப்புகளிடம் ஒத்துழைக்கிறோம். பினாமி சொத்து தொடர்பாக எதுவும் இல்லை. நீதி மற்றும் உண்மை வெளியே வரும். இதில், மறைக்கவோ, கவலைப்படவோ எதுவும் இல்லை. வருமான வரித் துறையின் நடவடிக்கையானது, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையா? என்று கேட்கின்றனர். ஆம். இது அரசியல் நடவடிக்கை தான் என்பது அனைவருக்கும் தெரியும். விவசாயிகளுக்கு உதவ பிரியங்கா காந்தி களத்தில் இறங்கும் போதும், பிற பிரச்னைகளுக்காக அவர் குரல் எழுப்பும்போதும், எனக்கு எதிராக நடவடிக்கை தொடரும். இது பல ஆண்டாக நடைபெற்று வருகிறது. அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறேன்’ என்றார்.

Related Stories:

>