×

ஆழ்கடலில் அழகிய ஆபத்து!

ஜெல்லி மீன்கள் காண்பதற்கு எவ்வளவு அழகோ அத்தனை ஆபத்தானது என்கிறார்கள் கடலியல் அறிஞர்கள். தமிழில் கடல் இழுது என்று பொதுவாகச் சொல்லப்படுகிற ஜெல்லியை, நம் மீனவர்கள் ‘‘சொறி” என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் Jelly fish என்று இது குறிப்பிடப்பட்டாலும் இது மீன் இனத்தைச் சேர்ந்தது அல்ல. கடல் சாமந்தி, பவளப்பாறை இனத்தைச் சேர்ந்த கடல் உயிரி இது.
ஜெல்லிகள் இம்சை உயிர்கள் (Nuisance species) என்று குறிப்பிடப்படுகின்றன.  மீன் வலைகளில் அதிகமாக மாட்டிக்கொள்வது, கடலில் குளிப்பவர்களுக்கு அரிப்பு, நமைச்சல், குடைச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவது, நீர்க்குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவது என்று பலவிதங்களிலும் ஜெல்லி மனிதர்களுக்கு இம்சை செய்பவைதான். 2010ல் ஒரு ஆழ்கடல் ஜெல்லி கண்டறியப்பட்டது. பேத்திகோரஸ் என்கிற அறிவியல் பெயர் கொண்ட இந்த ஜெல்லி, 2500 அடி ஆழத்தில் அதிகமாக வசிக்கக்கூடியது. இதற்கு ‘Darth Vader Jelly’ என்று அறிவிலாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். ஜெல்லியின் படத்தைப் பார்த்த உடனேயே டார்த் வேடரின் ஹெல்மெட் வடிவத்தைக் கண்டுகொண்ட ஸ்டார் வார்ஸ் ரசிகர்கள் பெருமகிழ்ச்சியடைந்தார்கள்.

கடந்த நவம்பர் மாதம் கோவாவின் கடற்கரைப் பகுதிகளில் ஜெல்லி மீன்களால் அதிக பாதிப்புகள் உருவாகின. கடலில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளில் 90 பேர் ஜெல்லி மீன்களால் பாதிக்கப்பட்டனர். ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையும் தேவைப்பட்டது.எல்லா ஜெல்லிகளும் மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல. ஜெல்லிகளின் நச்சு அளவு, நம்முடைய வயது, உடல் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து நமக்கான பாதிப்பு மாறுபடும். ஆனால் பொதுவாக ஜெல்லிகளிடமிருந்து விலகி எச்சரிக்கையாக இருப்பதுதான் நல்லது. கடல்நீரில் குளிக்கும்போதோ கடற்கரையில் நடக்கும்போதோ ஜெல்லிகளைப் பார்த்தால் உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிட வேண்டும். ஜெல்லி களைக் கைகளால் தொடக்கூடாது. ஜெல்லி கொட்டி விட்டால் கடும் வலியும் குடைச்சலும் ஏற்படும். அப்போது உடனே அந்த இடத்தை வெந்நீரால் கழுவ வேண்டும். எந்த அளவுக்கு உடல் சூடு பொறுக்குமோ அந்த அளவுக்கு சூடான வெந்நீரைப் பயன்படுத்தலாம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். ஜெல்லிகள் நம்மைத் தாக்கினால் என்னென்ன செய்யலாம் என்பதற்குப் பல கைவைத்தியங்களும் யோசனைகளும் சொல்லப்படுகின்றன. அவற்றை நம்பி காலம் தாழ்த்தாது உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே நல்லது.



Tags : sea , Deep sea
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!