×

பிரிஸ்பேனில்தான் 4வது டெஸ்ட் போட்டி

சிட்னி: பிரிஸ்பேனில் காபா மைதானத்தில் நடைபெற உள்ள 4வது டெஸ்ட் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுமாறு, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எங்களுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை. அதனால் அட்டவணைப்படி இந்திய  அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில்தான் நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா  வென்றது. மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் பதிலுக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. தற்போது 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள்  (7ம் தேதி) சிட்னியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாகாணத்தின் எல்லைகள் அனைத்தையும் மூடி சீல் வைத்து விட்டது ஆஸ்திரேலிய அரசு. இதனால் பிரிஸ்பேனில் நடைபெற  உள்ள 4 போட்டியில் ஆடவுள்ள இந்திய வீரர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அது குறித்த முறையான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பிரிஸ்பேனில் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல் மற்றும் போட்டி நடைபெற உள்ள மைதானம் தவிர்த்து, வேறு எங்கும் இந்திய அணியின் வீரர்கள் செல்லக் கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட்  அணியின் வீரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ‘நாங்கள் என்ன மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளா? எங்களை கூண்டில் அடைப்பது போல ஓட்டல் அறைகளுக்குள் அடைக்கிறீர்கள்’ என்று இந்திய வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  மேலும் 4வது டெஸ்ட் போட்டியையும் சிட்னியிலேயே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் திட்டமிட்டபடி 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் காபா மைதானத்தில்தான் நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸி. கிரிக்கெட் வாரியத்தின் செயல் அலுவலர் நிக் ஹாக்லி  கூறுகையில், ‘நாங்கள் இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். 4 போட்டிக்கான இடத்தை மாற்றுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களிடம் கோரவில்லை. அதற்காக அதிகாரப்பூர்வமாக  மெயில் ஏதும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இதுவரை வரவில்லை. எப்படி இருந்தாலும் 4வது போட்டியை அறிவித்தபடி பிரிஸ்பேனிலேயே நடத்துவது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.


Tags : Test ,Brisbane , The 4th Test is in Brisbane
× RELATED தேர்தல் பறக்கும்படை சோதனை; ராஜபாளையத்தில் ₹3.33 லட்சம் பறிமுதல்