×

ஐஎஸ்எல் கால்பந்து பெங்களூரு-மும்பை சிட்டி இன்று மோதல்

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று படோர்டாவில் நடைபெறும் போட்டியில் பெங்களூரு எப்சி அணியுடன், மும்பை சிட்டி அணி மோதுகிறது. நடப்பு ஐஎஸ்எல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை சிட்டி அணி அவற்றில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 19 புள்ளிகளுடன் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூரு அணி,  அவற்றில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.

மும்பை சிட்டி அணி வீரர்கள் நடப்பு ஐஎஸ்எல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த 2ம் தேதி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை, 2-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்றுள்ளனர். குறிப்பாக  அணியின் முன்கள வீரர்களான ஆடம் லே ஃபாண்டர், ஹியூகோ பவுமஸ், விக்னேஷ் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மிரட்டலாக ஆடி வருகின்றனர். கேரளாவுக்கு எதிரான போட்டியில் முதல் 15 நிமிடங்களுக்கு உள்ளாகவே 2 கோல்களை அடித்து  விட்டு, அதன் பின்னர் ரிலாக்சாக தடுப்பாட்டத்தில் மும்பை வீரர்கள் கவனம் செலுத்தினர்.

அதற்கு முந்தைய போட்டியில் வலுவான ஐதராபாத் அணியையும் 2-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தினர். அதனால் பெங்களூரு அணிக்கு  இன்றைய போட்டி சவாலான ஒன்றுதான் என்று கூற வேண்டும். ஜாம்ஷெட்பூர் மற்றும் மோகன்பெகான் அணிகளுக்கு எதிரான  கடந்த 2 போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியடைந்துள்ளது. முன்கள வீரர்களான சுனில் செட்ரியும், கிளேடன் சில்வாவும், எரிக் பார்ட்டலூவும் சிறப்பாக ஆடுகின்றனர்.  எனினும் அவர்களுக்கு மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு போதிய அளவில் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். இன்றைய போட்டியில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க பெங்களூரு வீரர்கள் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

சென்னையின் எப்சி பரிதாப தோல்வி

நேற்று நடந்த போட்டியில் சென்னையின் எப்சி அணியை, ஐதராபாத் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. முதல் பாதியில் 2 அணி வீரர்களும் கோல் ஏதும் போடவில்லை. 2ம் பாதி ஆட்டத்தில் ஐதராபாத்தின் ஜோயல் சையான்சே  அருமையாக ஒரு ஃபீல்டு கோல் அடித்து கணக்கை துவக்கி வைத்தார். 53வது நிமிடத்தில் ஹாலிசரணும் கோல் அடிக்க ஐதராபாத் அணி வலுவான நிலையை எட்டியது. சென்னையின் எப்சி வீரர் அனிருத் தாபா 67வது நிமிடத்தில் ஒரு கோல்  அடித்து, அணிக்கு சற்று தெம்பூட்டினார். ஆனால் ஐதராபாத்தின் ஜாவோ விக்டரும், ஹாலிசரணும் அடுத்தடுத்து கோல்களை அடித்து, 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி அணியை வீழ்த்தினர். 


Tags : ISL ,Bangalore ,Mumbai City ,clash , ISL football Bangalore-Mumbai City clash today
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை