×

அரியலூரில் 20 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கம் உழவர் சந்தையை திறக்க வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

அரியலூர் : அரியலூரில் 20 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள உழவர்சந்தையை திறக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் கோரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர் நகரத்தில் பேருந்து நிலையம் அருகில் விவசாயிகளின் நலன் கருதி ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் குறைந்த விலையில் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யும் வகையில் கடந்த 2000ம்ஆண்டு செப்டம்பர் 23ம்தேதி உழவர் சந்தை துவங்கப்பட்டது. ஆனால் ஏனோ துவங்கிய சில மாதங்களிலேயே உழவர் சந்தை செயல்பட முடியாத வண்ணம் முடக்கப்பட்டு விட்டது.

இதனால் அரியலூர் மாவட்ட பொதுமக்களும் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் காய்கறிகள் சாகுபடி செய்துள்ளனர், குறிப்பாக திருமானூர் ஒன்றியத்தில் வெற்றியூர், சாத்தமங்கலம், விரகாலூர், கள்ளூர், அருங்கால், வண்ணம், புத்தூர், எரக்குடி, கீழப்பழுவூர், கவுண்டர் பண்ணை, மேலப்பழுவூர், மல்லூர், மறவனூர், பளிங்காநத்தம் சன்னாவூர் உள்ளிட்ட கிராமங்களில் கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலை, மிளகாய், மல்லி, முள்ளங்கி, தக்காளி, பூசணிக்காய், பரங்கிக்காய், சுரக்காய், பாகற்காய், தேங்காய், முருங்கைக்காய், கீரை வகைகள் உள்ளிட்ட ஏராளமான நாட்டு வகை காய்கறிகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உழவர் சந்தை மீண்டும் இயங்கிட தலையிட்டு முறையாக நடவடிக்கை எடுத்து பொங்கலுக்கு முன்பாக இயங்கிட நடவடிக்கை எடுத்தால் உழவர்களுக்கு நல்ல விலையும், அதே நேரத்தில் இடைத்தரகர்களின் தொந்தரவு இல்லாமல் நுகர்வோர்கள் விவசாய விளைபொருட்களை குறைந்த விலையில் வாங்கி பயனடைய முடியும்.

எனவே கலெக்டர் பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களைப் போன்று சிறப்பான முறையில் உழவர் சந்தையினை செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க.சண்முகசுந்தரம் ஆன்லைன் மூலம் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ariyalur ,meeting , Ariyalur: A demand has been made at the meeting to open a farmers' market in Ariyalur which has not been operational for 20 years.
× RELATED அரியலூர் அருகே பெண்ணின் ஆபாச...