×

பொங்கல் பண்டிகையையொட்டி வேட்டங்குடியில் மண்பானை தயாரிப்பு பணி மும்முரம்-தொழிலை பாதுகாக்க வலியுறுத்தல்

கொள்ளிடம் : பொங்கல் பண்டிகையையொட்டி வேட்டங்குடியில் மண்பானை தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. நலிந்து வரும் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.மண்பானையில் செய்யப்பட்ட பல பொருட்களை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் மண்பாண்டங்களை வாங்கி பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் சமீப காலங்களில் மீண்டும் மண்பாண்டங்களை பயன்படுத்துவதில் சிலர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மண்பானையால் எந்த உணவுகளை சமைத்தாலும் அதன் சுவை தனியாக இருக்கும், மண்பானையில் உணவு சமைத்து சாப்பிட்டால் உடல்நலம் பாதுகாக்கப்படும். கோயில் திருவிழாக்களில் மண்பானையில் பொங்கல் வைத்து இறைவனை வழிபடுவர். தற்போது மாறிவரும் நாகரீகத்தின் அடிப்படையில் மண்பானை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் மண்பானை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு மண்பானை உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஊரடங்கு உத்தரவால் மண்பானை விலை போகாததால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கொள்ளிடம் அருகே வேட்டங்குடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது வீட்டிலேயே பரம்பரையாக மண்பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பானை, அடுப்பு, சட்டி மற்றும் குதிரை உள்ளிட்ட சாமி சிலைகளையும் மண்ணால் செய்து விற்பனை செய்து வருகிறார். மாரிமுத்து மகன் துளசந்திரன். இவர் ஏரோநாட்டிக்கல் பட்டப்படிப்பு நான்காமாண்டு படித்து வருகிறார். இவரும் இவரின் தந்தையுடன் சேர்ந்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து துளசந்திரன் கூறுகையில், தமிழக அரசு மண்பானை உற்பத்தியாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு குடும்ப அட்டைக்கு அரிசி வழங்குவதைபோல அனைவருக்கும் மண்பானை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மண்பானை உற்பத்தி செய்வோரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். மேலும் மன்பானை உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடன் வழங்க தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.

இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மண்பானைகள் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மண்பானைகளை விரும்பி வாங்கி வருகின்றனர். மண்பாண்ட தொழில் காலம்காலமாக தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. இந்த தொழிலை பாதுகாக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மண்பாண்டம் தயார் செய்யும் தொழில் குறித்த பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றார்.

Tags : festival ,Pongal , Kollidam: Pottery preparation work is in full swing in Vettangudi on the occasion of Pongal festival.
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...