×

குமரி மாவட்டத்தில் சுருங்கி வரும் விளைநிலங்கள் தடுப்பணை திட்டங்கள் உயிர் பெறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

*குரல் அற்றவர்களின் குரல்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, ரப்பர், வாழை ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். நெல்  கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோகம் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயத்தின் உயிர் ஆதாரமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் உள்ளன. இதுதவிர அணைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் வாய்க்கால் வழியாக குளங்களில் தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மழைகாலங்களில் அதிக தண்ணீர் கிடைக்கும். இருந்தாலும் கோடை காலத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீரை தேடி அலையவேண்டியுள்ளது.

குமரி மாவட்டத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலை தொடருகிறது. இங்கு இருபருவமழை பெறும் நிலை இருந்தாலும், மழைத்தண்ணீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள் அமைத்தால், ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைப்பதுடன் நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப்படும். இதனால் இயல்பாகவே குடிநீர் பிரச்னை என்பதே இல்லாத நிலை ஏற்படும். ஆனால் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி புதிய குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள நீராதாரங்களை மையப்படுத்தியே திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

குமரி மாவட்டத்தில் பல வாய்க்கால்கள் இருந்தாலும், குழித்துறை தமிரபரணி ஆறு, பழையாறு, வள்ளியாறு, மற்றும் பருத்திவாய்க்கால், பாம்புருவிவாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீர் அனைத்தும் கடலில் சென்று சேருகிறது. இதுபோல் அணைகள் நிரம்பினாலும் உபரி தண்ணீர் இந்த ஆறுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த ஆறுகளில் செல்லும் தண்ணீரால் விவசாயத்திற்கு எந்த பயனும் இல்லாத நிலை இருந்து வருகிறது. பழையாற்றில் சபரி அணை, குமரி அணை, சோழன் திட்டைஅணை என 11 தடுப்பணைகள் உள்ளன.

தற்போது சுமார் 4 தடுப்பணைகள் மட்டும் நல்ல நிலையில் உள்ளது. மற்ற தடுப்பணைகள் ஷட்டர்கள் உடைந்தும், கட்டுமான பணிகள் பழுதடைந்தும் காணப்படுகிறது. இதுபோல் பரளியாற்றில் திற்பரப்பு, அருவிக்கரை ஆகிய பகுதியில் தடுப்பணை உள்ளது. இதுபோல் குழித்துறை தாமிரபரணியாற்றில் 3 தடுப்பணைகளும், வள்ளியாற்றில் இரணியல், பள்ளம்பாலம் உள்ளிட்ட இடங்களிலும தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் இந்த ஆறுகளில் மேலும் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் நாளுக்குநாள் விவசாய நிலப்பரப்பு குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி நடந்த மாவட்டத்தில் தற்போது சுமார் 5 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில்தான் நெல்சாகுபடி நடந்து வருகிறது. இதற்கு நீர்ஆதாரம் குறைவே காரணம். ஆறுகளில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுப்பணை கட்டி விவசாயத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டால் வரும் நாட்களில் விவசாயநிலத்தின் பரப்பளவு அதிகரிக்கும்.

பேச்சிப்பாறை அணை பகுதியில் கூடுதல் தண்ணீர் வரவழைக்கவும், நீர் பெருக்கம் ஏற்படவும் சிறு ஓடைகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று மாவட்டம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதில் பொதுப்பணித்துறை ஆய்வு நடத்தியது, ஆய்வு நடத்தப்பட வேண்டியது, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது என்று பல்வேறு நிலைகளில் இந்த தடுப்பணை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஆனால் இதுவரை இதில் ஒன்று கூட செயல்பாட்டிற்கு வரவில்லை. அதிகாரிகள் அரசுக்கு திட்டம் தொடர்பாக கருத்துரு அனுப்பி வைத்திருப்பதாகவும், நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடங்கும் என்றும் கூறுகின்றனர். எனவே தமிழக அரசு இந்த தடுப்பணை திட்டங்கள் உயிர் பெற போதிய நிதி ஒதுக்கீடுகளை குமரி மாவட்டத்திற்கு வழங்க வேண்டும். அப்போதுதான் மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும், குடிநீர், நிலத்தடிநீர் பிரச்சனை இருக்காது.

அரசு பரிசீலனை செய்ய வேண்டும்

பாசனத்துறை சேர்மன் வின்ஸ்ஆன்றோ கூறியதாவது: உலக்கை அருவி, முல்லையாறு, தாடகைமலை ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கை ஆகும். இதனை போன்று தாமிரபரணி, வள்ளியாறு மற்றும் பருத்திவாய்க்கால், பாம்புருவி வாய்க்கால் போன்றவற்றிலும் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆறுகளில் தடுப்பணைகள் கட்டும்போது உறைகிணறுகளில் குடிநீர் தட்டுபாடின்றி வருடம் முழுவதும் கிடைக்கும். இதுபோல் தடுப்பணை பகுதியில் வாய்க்கால் அமைத்து, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும்போது கோடைகாலங்களிலும் குளங்களிலும் தண்ணீர் இருக்கும், விவசாயத்திற்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும். அதுபோல் அரசுக்கு அனுப்பியுள்ள தடுப்பணை சம்பந்தமான கருத்துருக்களை அரசு பரிசீலனை செய்து தடுப்பணைகள் கட்ட முன்வரவேண்டும். என்றார்.

Tags : district ,Kumari , Nagercoil: Farmers cultivate paddy, coconut, rubber and banana in Kumari district.
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...