×

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் ₹10 நாணயங்கள் வாங்க மறுக்கும் வியாபாரிகள் மாற்ற முடியாமல் தவிக்கும் மக்கள்-விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

வேலூர் : வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ₹10 நாணயங்கள் செல்லுமா, செல்லாதா என்ற கேள்விக்குறியால் பல மாதங்களாக வங்கிகளும், வணிக நிறுவனங்களும் அந்த நாணயத்தை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் ரிசர்வ் வங்கியால் பத்து ரூபாய் நாணயங்கள் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. இரு உலோகங்களால் வட்ட வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிதாக வந்த ₹10 நாணயத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, தேடி சேகரித்து வைத்தனர். இதற்கிடையில், நாணயங்கள் செல்லாது என வதந்தி பரவியது. இதையடுத்து, பொதுமக்கள் பலரும் ₹10 நாணயங்கள் வாங்குவதை தவித்தனர்.

இதற்கிடையில், நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறி, ₹500, ₹1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது, இந்த பழைய நோட்டுகளை உடனடியாக வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது.
அப்போது புதிதாக ₹10 உலோக நாணயங்கள் அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டது. அவ்வாறு புழக்கத்தில் விடப்பட்ட சில நாட்களில் பல இடங்களில் போலி பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாக கூறி தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

அதாவது, ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அந்த வகையில் புழக்கத்தில் உள்ள ₹10 நாணயங்களிலும் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ₹10 நாணயங்களில் இருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், அனைத்துமே சட்டப்படி செல்லுபடியாகும்.

இந்த நாணயங்கள் அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றவை. இருப்பினும் ₹10 நாணயங்கள் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதால் பல மாவட்டங்களில் இந்த நாணயங்களை பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ₹10 நாணயங்கள் செல்லாது என வதந்தி பரவி வருவதால் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் வாங்க மறுக்கின்றனர். பஸ்கள், கடைகள், மார்க்கெட்டுகளில் மட்டுமல்லாது, ஆவின் பூத்களிலும் வாங்குவதில்லை.

அரசு பஸ் டெப்போக்களில் வாங்க மறுப்பதால், பயணிகளிடம் கண்டக்டர் வாங்க மறுக்கிறார். போஸ்ட் ஆபீஸ்களிலும் யாரிடமும் ₹10 நாணயங்களை வாங்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவிருக்கிறதாம். வங்கிகளிலும் பணம் செல்லாது என்பதாக சொல்லாமல், ரூபாய் தட்டுப்பாட்டினால் சில்லரைகளை எண்ண முடியவில்லை, வைக்க இடமில்லை என்று வாங்க மறுக்கின்றனர்.

மின்வாரியம், வரிவசூல் மையங்கள் எங்கும் வாங்க மறுப்பதும், குறிப்பாக வங்கிகளே மறுப்பதும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வடமாவட்டங்களில் ₹10 நாணய புழக்கம் முழுமையாக முடக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு செல்லாக்காசாக மாறிவிட்டதே இதற்கு காரணம் என்று வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

இதுகுறித்து முன்னோடி வங்கி அதிகாரிகள் கூறியதாவது: ₹10 நாணயம் செல்லுபடியாகும். பொதுமக்கள் வியாபாரிகள் எந்தவித பயமுமின்றி பயன்படுத்தலாம். வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் என யாரும் வாங்க மறுக்க வேண்டாம். ₹10 நாணயங்கள் செல்லாது என்ற வதந்திகளை புறக்கணித்து நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம்.புதிய மற்றும் பழைய ₹10 நாணயங்கள் அனைத்தும் புழக்கத்தில் நீடிக்கும்.

இதனை தடையோ, ரத்தோ செய்யவில்லை. பொதுமக்களும், வணிகர்களும் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு தடையேதும் கிடையாது. இவ்வாறு ₹10 நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் பற்றி, ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு புகார் தெரிவிக்கலாம். ரிசர்வ் வங்கி அறிவிப்பின்றி ஒரு நாணயத்தை செல்லாத நாணயமாக கருதுவதும், வாங்க மறுப்பதும் மிகப்பெரிய குற்றம். வங்கிகள் ஒருபோதும் மறுக்கக்கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரிசர்வ் வங்கி அறிவிக்காத நிலையில் ₹10 நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி காட்டுத்தீ போல பரவி, மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நாணயம் செல்லும் என்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மேலும் ₹10 நாணயத்தின் வடிவம், எடை ஆகியவை எந்த ஆண்டில், யார் நினைவாக அச்சடிக்கப்பட்டது போன்ற விபரங்களை வங்கிகள் நோட்டீஸ் மூலம் அளித்து, பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த நடவடிக்கைகளில் எந்த வங்கியும் இதுவரை ஈடுபடவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : traders ,Vellore ,Ranipettai ,Tirupati ,Thiruvannamalai , Vellore: Whether ₹ 10 coins will go or not in Vellore, Tirupati, Ranipettai and Thiruvannamalai districts
× RELATED சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு...