ஓசூர் அருகே வனப்பகுதியில் 3 குழுக்களாக பிரிந்து 70 யானைகள் முகாம்-விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் : ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில், 70க்கும் மேற்பட்ட யானைகள் 3 குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 60க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் கடந்த 15 நாட்களாக முகாமிட்டுள்ள 10 யானைகள் என 70 யானைகள், தற்போது 3 பிரிவுகளாக பிரிந்து சுற்றி வருகின்றன. இந்த யானைகளை 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்த யானைகள், இரவு நேரங்களில் உணவு தேடி கிராமப்பகுதிகளில் வலம் வருவதால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பகல் நேரங்களில் விவசாய தோட்டங்களில் பாதுகாப்பாக வேலை செய்யவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். தங்கள் பகுதியில் யானைகள் நடமாட்டம் குறித்து தெரியவந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராகி போர்கள் நாசம்

தேன்கனிக்கோட்டை அருகே, நேற்று முன்தினம் இரவு எஸ்.குருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கௌரம்மா என்பவர், தனது விவசாய களத்தில் குவித்து வைத்திருந்த ராகி போர்களை யானைகள் நாசம் செய்தன. இதுகுறித்து தகவலறிந்த தர்மபுரி மண்டல வனபாதுகாவலர் தீபக்பில்ஜி, நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டார். அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும், எஸ்.குருப்பட்டி பகுதியில் சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார் மற்றும் வனவர், வனகாப்பாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>