அதிக பாரம், அதிவேகம் குமரியில் உயிர்பலி வாங்கும் டாரஸ் லாரிகள்-சாலைகளும் சேதம்

நாகர்கோவில் : குமரியில் அதிவேகம் அதிக பாரத்துடன் செல்லும் டாரஸ் லாரிகளால் சாலைகள் சேதம் அடைவதுடன், உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. குமரியில் கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், 4 வழிச்சாலை, இரட்டை ரயில் பாதை உள்பட பல்வேறு பணிகளுக்கு கற்கள், எம்.சான்ட் போன்றவை அதிகளவில் கூடன்குளத்தில் இருந்து  ராதாபுரம் வழியாக கொண்டு வரப்படுகின்றன. நாகர்கோவில் நகரம் மட்டுமின்றி, புறநகரான ஆரல்வாய்மொழி, துவரன்காடு, இறச்சகுளம், சுங்கான்கடை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.

 ஒரு மணி நேரத்தில் 25க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் செல்கின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு எடையில் கற்கள் மற்றும் எம்.சாண்ட்கள், மரத்தடிகள் இந்த டாரஸ்  லாரிகளில் ஏற்றப்படுகின்றன. இதற்காக வாகன வடிவமைப்பில், கூடுதல் உயரத்திற்கு கம்பிகள் மற்றும் தகடுகள் மூலம் தடுப்பு அமைப்பை பெரிதாக்கியுள்ளனர்.

 மேலும் இந்த வாகனங்கள் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும் அதிவேகத்தில் செல்கின்றன. இவ்வாறு அதி வேகத்தில் செல்லும் டாரஸ்கள் இருசக்கர  வாகனங்களின் பின்பக்கம் மோதி பல உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளன.

  நாகர்கோவில் நகருக்குள் பகலில் லாரிகள், சரக்கு வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டு இதற்காக களியங்காடு மற்றும் ஆரல்வாய்மொழியில் போக்குவரத்து காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சில நேரங்களில் ஆரல்வாய்மொழி மற்றும் களியங்காட்டில் போக்குவரத்து போலீசார் இல்லை என்றால், கனரக வாகனங்கள் நாகர்கோவில் நகருக்குள் வந்து செல்கின்றன.  

 

சில டாரஸ் லாரிகள்  நெல்லை வருவதற்காக  இறச்சகுளத்திலிருந்து தாழக்குடி பீமநகரி சாலை வழியாக நாக்கால் மடம் விலக்கில் தேசிய நெடுஞ்சாலையை சென்றடைகின்றன.  சில டாரஸ், லாரிகள் ஈசாந்திமங்கலத்தில் இருந்து  அரசியார் கால்வாய் அமைந்துள்ள ஊராட்சி சாலையான தொந்திக்கரை சாலையை பயன்படுத்தி வருகின்றன.  

மிகவும் குறுகலான இந்த சாலைகளில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல், லாரிகளை கண்டு சாலையை விட்டு, முள்புதருக்குள் இறங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்படும் அபாயம் உள்ளது.  இதில் தொந்திக்கரை சாலையில் கனரக வாகனங்கள் ெசல்லக்கூடாது என பலகை அமைத்து இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில நாட்களிலேயே இரும்பு தடுப்பும், எச்சரிக்கை பலகையும் காணாமல் போய்விட்டன.

இதனால், மீண்டும் இந்த சாலைகளில் டாரஸ் லாரிகள் செல்கின்றன. இது ஒருபுறம் இருக்க அதிக பாரம் காரணமாக சாலைகளும் பழுதடைந்து வருகின்றன. தற்போது புத்தேரி முதல் துவரன்காடு வரை புத்தன் அணை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சில இடங்கள் நீங்கலாக இதர பகுதிகளில் சீரமைக்கப்பட்டுள்ளது.

 சுமார் 2 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு, அதில் சிமென்ட் கலந்த கற்கள் கொட்டப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது., ஆனால், அதிக பாரத்துடன் டாரஸ் லாரிகள் வருவது காரணமாக தற்போது புதியதாக சீரமைக்கப்பட்ட சாலை பகுதிகள் மேடு பள்ளமாக காணப்படுகின்றன. இதனால், இருச்சக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்கள் கூட இந்த சாலையில் செல்லும் போது தடுமாற்றம் ஏற்படுகிறது.

மேலும், பல பகுதிகளில் சாலையில் மீண்டும் குண்டுகள் ஏற்பட்டு சாலைகள் பழுதாகி வருகின்றன.   எனவே, மாவட்ட எல்கை பகுதியில் அல்லது காவல்கிணறு பகுதியில் சோதனை செய்து கடும் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறச்சகுளம், நாவல்காட்டில் மாயமான சாலைகள்

நாவல்காடு சந்திப்பு அருகே கடந்த இரு மாதங்கள் முன்பு சாலையின் மையப்பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பள்ளம் தோண்டினர். ஆனால், இதனை சரியாக மூடவில்லை. இதனால், சில மீட்டர் தொலைவிற்கு சாலைகள் இன்றி குண்டும் குழியுமாக அபாய நிலை உள்ளது. இதுபோல் இறச்சகுளம் சந்திப்பிலும், சாலையின் மையப்பகுதியல் பள்ளம் தோண்டி சரியாக மூடப்படாமல், வாகன ஓட்டிகளை பதம் பார்த்து வருகிறது. எனவே இந்த பகுதியில் சாலையை பழுது பார்க்க கோரிக்கை எழுந்துள்ளது.

மாதம் தோறும் மாமூல்

கார்களில் பம்பர் அமைப்பது கூட வாகன நிறுவனம் பெற்ற கட்டுமான அனுமதிக்கு முரண் எனக்கூறி வழக்கு பதிவு செய்யும் ஆர்.டி.ஓ மற்றும் காவல் துறையினர், இதுபோன்ற அதிக பாரம் மற்றும் அதிவேக டாரஸ் லாரிகள் மீது  நடவடிக்கை எடுப்பதில்லை. இதற்காக ஆர்.டி.ஓ, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை மாமூலாக செல்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இதுபோன்ற டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்த முடியவில்லை  என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories:

>