அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி 20% யுரேனியம் செறிவூட்டும் பணிகளை தொடங்கியது ஈரான்!: இஸ்ரேல் கடும் கண்டனம்..!!

தெஹ்ரான்: சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் மீண்டும் தொடங்கியிருக்கிறது. ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் கடந்த 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் தங்களது அணுசக்தி திட்டங்கள், அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக்கொண்டது. ஒப்பந்தத்தில் அணுசக்திக்கு தேவையான யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்திற்கும் மேல் செறிவூட்டக்கூடாது என்று ஈரானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது 20 சதவீதம் அளவிற்கு செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியிருக்கிறது.

ஈரானில் யுரேனியம் செறிவூட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது,  யுரேனியம் செறிவூட்டும் அளவை உயர்த்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஈரான் அதன் கடமைகளில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறது. அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான ஈரானின் நோக்கத்தை இதன் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டார். அமெரிக்கா அதிபர் டிரம்ப், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த 2018ம் ஆண்டு அறிவித்ததுடன் ஈரான் மீதான பொருளாதார தடைகளையும் மீண்டும் அமல்படுத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை தொடர்ந்து மீறி வருகிறது. அதிபர் ஹாசன் ரோஹானி உத்தரவின்பேரில் போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில், 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் சூழலில் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய அவருக்கு நெருக்கடி அதிகரிக்கும் வகையில் ஈரான் அதன் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Related Stories:

>