×

நீராலானது இவ்வுலகு

நன்றி குங்குமம் தோழி

பேரிடர்களோடு வாழுதல்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.

கஜா புயலின் தாக்குதல் காரணமாக தற்போதைய நிலை வரை சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.  கால்நடைகள், காட்டு உயிரினங்கள் மற்றும் பறவைகளும் கூட ஆயிரக்கணக்கில் இறந்துள்ளன. விவசாய நிலங்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்கள் வீடுகளை, படகுகளை இழந்துள்ளனர். பல ஆயிரம் மரங்கள் சாய்ந்துள்ளன. பொருளாதார  ரீதியிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வர பல ஆண்டுகள்  ஆகலாம்.இப்படியான இயற்கை சீற்றங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி வருகின்ற சூழலில் கஜா புயலை நாம் எப்படி  புரிந்துகொள்வது.

புயல்களை உருவாக்கும் காலநிலை மாற்றம்

தானே, வர்தா, ஒக்கி  புயல்களை தொடர்ந்து மிகக் குறுகிய காலத்தில் தமிழகம் சந்திக்கும் நான்காவது புயல் கஜா. இப்படியான  நிகழ்வுகளை  அதி தீவிர இயற்கை சீற்றங்கள் என கூறலாம். காலநிலை மாற்றம் காரணமாகவே இத்தகைய இயற்கை சீற்றம் அதிகரித்து  வருகின்றன என ஐக்கிய சபை கீழே இயங்கும் காலநிலை மாற்றம் தொடர்பான  சர்வதேச குழுவின் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.பூமியின் மத்திய ரேகை பகுதியில் இந்தியா அமைந்துள்ளது. இந்த இயற்கை அம்சம் காரணமாக தமிழகம் வெப்ப மண்டல பகுதியாக  உள்ளது. நம் தமிழகம் அருகே உள்ள கடலும், வெப்ப மண்டலும் சேர்த்து புயல் காற்றை உண்டாக்குகின்றன. எனவே புயல் தாக்குதல்களை  தமிழகம் தொடர்து சந்தித்து வருவது இயற்கையாக நிகழும் தொடர் நிகழ்வு தான். ஆனால் தற்போது இந்த தாக்குதல்களின்  எண்ணிக்கையும், புயலின் வேகமும் அதிகரித்துள்ளது.

இது தான் காலநிலை மாற்றத்தின் திருவிளையாடல்.1890 முதல் 2002ம் ஆண்டு வரை 304 புயல்களை இந்தியாவின் கிழக்குக் கடற்கரை  சந்தித்துள்ளது. மேற்கு கடற்கரை 48 புயல்களை சந்தித்துள்ளது.இனி வரும் காலங்களில் புயல்களின்  எண்ணிக்கை அதிகரிக்கும் என  ஐ.பி.சி.சி அறிக்கை கூறுகிறது. மேலும், வடக்கு இந்தியப் பெருங்கடலின் வெப்பம் அதிகரித்து வருவதால் மேற்கு கடற்கரையும் அதிக  அளவில் புயல்களை சந்திக்குமென்று அறிக்கை தெளிவுபடுத்துகிறது.கஜா புயல், கடந்த 16 ஆண்டுகளில் தமிழகத்தை தாக்கிய பத்தாவது  புயலாகும். இந்த ஆண்டின் 13வது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

அதாவது  புயல்களின் வரத்து 30% அதிகரித்துள்ளது.சரி இனி நாம் என்ன செய்வது? புயல் போன்ற இயற்கை சீற்றங்களை தடுத்து நிறுத்த  முடியுமா? நிச்சயமாக முடியாது! புயல்கள் அதிகரிக்க காரணமாக உள்ள காலநிலை மாற்றத்தை நிறுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது!!  உலகளவில் அறிவியலாளர்களின் முடிவு இதுவே.பின் என்ன தான் செய்வது? இயற்கை சீற்றங்களோடு இயைந்து வாழ கற்றுக்  கொள்ளுதல் மற்றும் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல் ஆகிய இரண்டை மட்டுமே தீர்வாக அறிவியலாளர்கள்  முன்வைக்கிறார்கள்.

இயற்கையை அறிதல்

புயல் காற்று போன்ற இயற்கை பேரிடர்களோடு இயைந்து வாழ பேரிடர்களாக புரிந்து கொள்ள வேண்டியது அடிப்படையானது. அறிவியல்  என்பதே இயற்கையை அறிதல் தான். மனித சமூகம் பல ஆயிரம் வருடங்களாக இயற்கையை அவதானித்து, அதனோடு இயைந்து வாழ  கற்றுள்ளது. இயற்கையை அவதானிக்கும் ஆற்றலே மனித சமூகத்தை எல்லாவித அழிவில் இருந்து காத்து வந்து இருக்கிறது. மாறி வரும்  தற்போதைய இயற்கை சூழலை அவதானித்து, மாறுதலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்வதே மனித சமூக இருப்புக்கான ஒரே வழி.
வெப்ப மண்டல பகுதிகளின் வானி லையை அவதானிப்பதே மிகப்பெரிய சவாலாக  தற்போதைய நிலை வரை உள்ளது.  காலநிலை  மாற்றத்தின் காரணமாக உண்டாகும்  நிச்சயமற்ற தன்மை இந்த சிக்கலை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. ஆக, இந்தியா போன்ற வெப்ப  மண்டல நாட்டிற்கு ஏற்ற வகையில் புதிய சூழலை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இங்கு  உள்ளது.

அமெரிக்கா,  ஆஸ்திரேலியா,  ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் மாதிரிகளை கொண்டே இந்தியாவின் தட்பவெப்ப நிலை, மற்றும்  பிற காலநிலை கணக்கிடப்படுகிறது. இவை போதுமானதாக இல்லை. எனவே நாம் இன்னும் அதிகளவில் தொழில்நுட்பங்களை  வளர்த்தெடுக்க வேண்டி இருக்கிறது. மேலும், இந்திய பெருங்கடலுக்கே உண்டான சிறப்பு அம்சங்களான  வெப்பசலனங்கள்,  இந்தியப்பெருங்கடலில் உள்ள டைபோல், பெருங்கடல்கள்- அலைகள் - வளிமண்டலம்  இடையே நடைபெறும் பரிமாற்றங்கள் போன்ற பல  சூழல் அமைப்புகளை கணக்கிட்டு இயற்கையை கணிக்க வேண்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக சீற்றங்களை புரிந்து கொள்ளவும் முடியும்.  அதன் தாக்கத்தையும் அறிந்து கொள்ள முடியும். இந்த அறிவானது நம்மை பாதுகாத்து கொள்ள பெரும்உதவியாக இருக்கும். அதோடு  இயற்கையோடு இயைந்து வாழவும் வழி கொடுக்கும்.   

பாதிப்புகளை குறைத்தல்

இயற்கை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் வாழ்ந்த நம் முன்னோர்கள், இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களை தற்கொள்ளவும் ஆற்றல்  பெற்றவர்களாக இருந்தனர். சிந்துவெளி நாகரிகம் அழிவுக்கான காரணம் காலநிலை மாற்றமாக கூட இருக்கலாம் என்று ஓர் ஆய்வு  தெரிவிக்கின்றது. ஆக, சூழல் மாற்றத்திற்கு ஏற்ப வாழ்வு முறையை மாற்ற வேண்டிய தேவை உள்ளது. இந்திய பேரிடர் மேலாண்மை  சட்டம் இயற்கை சீற்றம் காரணமாக உண்டாகும் பேரிடர்களை எப்படி மேலாண்மை செய்ய வேண்டும் என்பதற்கான விதிகளை தருகிறது.

அதிலும் குறிப்பாக புயல் காற்று காரணமாக உண்டாகும் பேரிடர்களை கையாளுவதற்கான தனி சட்ட விதிகளையும் தந்துள்ளது. இதன் படி  செய்லபட வேண்டியது ஒவ்வொரு மாநிலத்தின் அடிப்படை கடமையாகும். தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை செய்வதற்கான தனி  துறையோ, சட்ட விதிகளோ இது நாள் வரை இல்லை. இப்படியான ஒரு அமைப்பை தனியாக உருவாக்க வேண்டியது மிகவும்  முக்கியமானது. அதற்கு தேவையான சட்ட விதிகளை உடனடியாக இயற்ற வேண்டும்.

தமிழகத்திற்கான பேரிடர் மேலாண்மை திட்டம் தயாரிக்க வேண்டும். அதுபோல மாவட்ட ரீதியிலான பேரிடர் மேலாண்மை திட்டமும்  தயாரிக்கப்பட வேண்டும். இயற்கை சீற்றங்கள், தாக்குதல்கள் நடைபெறக் கூடிய பகுதிகளை கண்டறிவது முதன்மையானது. புயல் காற்று  போன்ற தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளை முன்பே கண்டறிந்து அந்த பகுதியில் உள்ள கட்டுமானங்களை முறைப்படுத்த  வேண்டும். அந்த கட்டுமானங்கள் இயற்கை சீற்றங்களை தாங்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.

அதற்கான தொழில்நுட்பங்களை  வளர்த்தெடுக்க வேண்டும். இயற்கை சீற்றங்கள் குறித்த கல்வியை மக்களிடம் பரப்ப வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள  அவர்கள் பழக்கப்பட வேண்டும். இவை அரசின் கல்வி திட்டத்தில் இடம் பெற வேண்டும். இவை எல்லாவற்றையும் விட முக்கிய மானது  சூழலை பாதுகாப்பது. இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மை பாதுகாக்க சில இயற்கை சூழல்கள் உள்ளன.  அவற்றை பாதுகாக்க  வேண்டும்.

அரசின் கொள்கை திட்டங்கள்

நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் எரிசக்தி கொள்கையில் மாற்றும் கொண்டு வருவது காலத்தின் தேவை. நம் நாட்டின் தற்போதைய  உற்பத்தி முறை மற்றும் வளர்ச்சி  திட்டங்கள் சூழலை சீர்கெடுக்கும் வகையிலேயே உள்ளது. இவை இயற்கை சீற்றங்களை அதிகரிக்கவே  செய்யும். நம் பாதிப்புகளையும் அதிகரிக்கவே செய்யும். உலகளவில் நாம் பிற நாடுகளோடு இயைந்து காலநிலை மாற்றம் தொடர்பான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான கொள்கை திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

எரிசக்தி துறையில் மிகப் பெரிய மாற்றம் வேண்டும். பெட்ரோலிய பொருட்களில் இருந்து விடுதலை பெற வேண்டும். அனல் மின் நிலைகளை புறக்கணிக்க வேண்டும். மாற்று எரிசக்திக்கு மாற வேண்டும்.இவை எளிமையான செயல் அல்ல. மிகவும்  கடுமையான செயல் தான். ஆனால் நமக்கு வேறு வழி இல்லை. நாம் பிழைத்திருக்க இத்தகைய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள  வேண்டும். அரசின் திட்டங்களாக இவை மாற்றம் பெற வேண்டும். அதற்கான மக்கள் இயக்கம் வலுப் பெற வேண்டும்.

(முற்றும்)

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!