×

‘கிளவுட் ஆடிட்’ முறை மின்வாரியத்தில் அறிமுகம்

சென்னை: மின் வாரியத்தில் டிஜிட்டல் வடிவிலான ‘கிளவுட் ஆடிட்’ முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக மின்சார வாரியம் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து தலைமை பொறியாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பியிருந்தது. அதில், ‘பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஏற்ப சட்டங்களை மின்வாரியம் வகுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக வட்டங்கள், நிலையங்களில் சில பணிகளை செய்வதற்கு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் மின்சார வாரியத்தின் அறிவுறுத்தல்களின்படி தான் பணிகளை நிறைவேற்றும் ஒப்பந்ததாரர்கள் வேலையாட்களை ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக, பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம்-1952; ஊழியர்கள் மாநில காப்பீடு சட்டம்-1948; ஒப்பந்த தொழிலாளர் சட்டம்-1970; பிற மாநில தொழிலாளர்கள் சட்டம் 1979; ஊதியக் கொடுப்பனவு சட்டம்-1936 மற்றும் குறைந்தபட்ச ஊதியச் சட்டம்-1948 பிற சட்டரீதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், தற்போது டிஜிட்டல் வடிவிலான ‘கிளவுட் ஆடிட்’ முறையை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் மின்வாரியத்தின் அனைத்து வட்டங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

எனவே, ஒப்பந்ததாரர்கள் ஆன்லைன் இணக்க சேவை வழங்குநர்களிடமிருந்து பணி ஒப்பந்தங்களுக்கான சான்றிதழை பெற்று சட்டரீதியான இணக்க அனுமதியைப் பெற வேண்டும். அப்போது தேவையான ஆவணங்களை ஆன்லைன் மூலம் ஒப்பந்ததாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்த பிறகு தானியங்கி சுழற்சி முறையில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இச்சான்றிதழ் ஒன்றுக்கு ரூ.2.50 என்ற விகிதத்தில் நாள்/மாதத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.500 மற்றும் அதிகபட்ச கட்டணமாக ரூ.4,000 வரை வசூலிக்கப்படும். மறு தணிக்கைக்கு ரூ.300 ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். மேலும் இதனுடன் ரசீது செயலாக்க முறையும் ஒருங்கிணைக்கப்படுகிறது. எனவே ரசீதுகள் தீர்க்கப்படுவதற்கான பணிகள் அனைத்தும், டிஜிட்டல் முறையிலான சட்டரீதியிலான இணக்க சேவையில் அனுமதியை பெற்ற பிறகு தானாகவே மேற்கொள்ளப்படும். இதை அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ எனக்கூறியிருந்தது. இதன்படி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Tags : Introduction , Introduction of ‘Cloud Audit’ method in electricity
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...