சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு தமிழ்நாடு இன்று முதல் எனது மாநிலம் ; நான் அதன் சேவகன்: சஞ்சீப் பானர்ஜி பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு இன்று முதல் எனது மாநிலம்; நான் அதன் சேவகன் என்று புதிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கூறினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள சஞ்சீப் பானர்ஜி நேற்று காலை ராஜ்பவனில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர், உயர் நீதிமன்ற பதிவாளர்கள், பார்கவுன்சில் தலைவர், வக்கீல் சங்க தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் காலை 11.30 மணிக்கு தலைமை நீதிபதி உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் தலைமை நீதிபதியை வரவேற்று பேசினார். பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் இணை தலைவர் எஸ்.பிரபாகரன், வக்கீல் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பெண் வக்கீல்கள் சங்க தலைவி லூயிசாள், லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோரும் வரவேற்றனர்.

இதையடுத்து தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி ஏற்புரையாற்றி பேசியதாவது: உலகின் மிகப் பழமையான மொழி தமிழ். நாட்டிலேயே மொழியின் பெயரை கொண்ட மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். மிக தொன்மையான தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, கலைகள் என்னை வியக்கவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றமும் மிக பழமையான நீதிமன்றம். இங்கு பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன். எனது பணிக்கு வக்கீல்களான உங்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும். சிலர் மட்டுமே வக்கீல் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என நினைக்கிறார்கள். பொருளாதாரம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் சேவை முக்கியத்துவம் பெற வேண்டும். இப்போது நான் எனது மற்றொரு வீட்டுக்கு வந்துள்ளேன். இங்குள்ள கலாச்சாரத்தை கற்றுக்கொள்வேன். அரசியலமைப்பை உறுதி செய்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இன்றிலிருந்து தமிழ்நாடு எனது மாநிலம். நான் இந்த மாநிலத்தின் சேவகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

Related Stories:

>