×

தமிழக மக்களின் சோற்றில் மண் அள்ளி போட்டுவிட்டு அமைச்சர் காமராஜ் வெளி மார்க்கெட்டில் 5.36 லட்சம் டன் அரிசி விற்று ஊழல்: திருவாரூர் மக்கள் சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருவாரூர் ‘‘தமிழக மக்களின் சோற்றில் மண் அள்ளி போட்டுவிட்டு 5.36 லட்சம் டன் அரிசியை வெளிமார்க்கெட்டில் அமைச்சர் காமராஜ் விற்று ஊழல் செய்துள்ளார்’’ என்று திருவாரூர் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி, வலங்கைமான் ஒன்றியம் அவளிவநல்லூரில் நேற்று நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கிராமசபை கூட்டத்துக்கு பெண்கள் அதிகம் வருகிறார்கள். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்கள் சுற்றி நிற்பதை பார்க்கிறோம். எங்களுக்கு பாதுகாப்பு நீங்கள்தான். நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை. ஒவ்வொரு ஆண் வெற்றிக்கு காரணம் பெண்தான். பெரியார், 1949ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சீர்திருத்த மாநாட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசினார். அப்போது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என பேசினார். 1989ல் அதை தலைவர் கலைஞர் நிறைவேற்றினார்.

டெல்லியில் 39 நாட்களாக விவசாயிகள் போராடுகிறார்கள். மத்திய அரசு சிறிது கூட கண்டுகொள்ளவில்லை. சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என கூறி நாடுமுழுவதும் உள்ள பாஜக அல்லாத முதல்வர்கள் இதனை எதிர்த்து தீர்மானம் போடுகிறார்கள். விவசாயி என்று கூறும் எடப்பாடி பழனிசாமி அதை ஆதரித்து பேசி வருகிறார். இதைவிட வெட்ககேடு என்ன இருக்க முடியும். மோடி தவறான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தவர். அவர் சொல்வதை அப்படியே கேட்டு அடிமை ஆட்சி நடத்தி வருபவர் எடப்பாடி பழனிசாமி.

இந்த தொகுதி எம்.எல்.ஏ. அதாவது உணவுத்துறை அமைச்சராக இருக்கும் காமராஜ் - மன்னிக்க வேண்டும் - கமிஷன்ராஜ் பற்றி அதிகம் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சர் காமராஜ் தமிழக மக்கள் உண்ணும் சோற்றில் ஊழல் செய்துள்ளார். 5.36 லட்சம் மெ.டன் அரிசி வெளி மார்க்கெட்டில் விற்கும் ஊழல் செய்துள்ளார். இதுகுறித்து ஆதாரத்துடன் கவர்னரிடம் புகார் செய்துள்ளோம். அடுத்தவர் சோற்றில் மண் அள்ளி போடாதே என கிராமங்களில் சொல்வார்கள். ஆனால், இந்த கமிஷன் அமைச்சர் தமிழக மக்களின் சோற்றில் மண் அள்ளி போட்டுள்ள அமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

நெல் கொள்முதலில் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என மூட்டைக்கு ரூ.80 வசூல் செய்கிறார்கள். அது யாருக்கு போகிறது. கொள்முதல் செய்த நெல்லை அரிசியாக அரைக்க ரைஸ் மில்லில் கொடுப்பார்கள். அதற்கு மூட்டைக்கு இவ்வளவு என கமிஷன் பார்ப்பவர்தான் இந்த அமைச்சர். சாப்பாட்டில் ஊழல் செய்த அமைச்சரை இந்த காவிரி டெல்டா நிச்சயம் மன்னிக்காது. நீங்களும் மன்னிக்க மாட்டீர்கள். நிச்சயமாக சரியான பாடத்தை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. இந்த பகுதியில் பினாமிகளை வைத்துக்கொண்டு மணல் கொள்ளை நடந்து வருகிறது.

குறிப்பாக குவளைக்கால் மற்றும் ஆணைக்குப்பம் இடையே ரூ.142.08 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டது. பாலம் எதுக்காக? மக்கள் பயன்பாட்டுக்கா? மக்கள் போக்குவரத்துக்கா? இல்லை. அதிமுக ஒன்றிய செயலாளர் ராமகுணசேகரன் மூலமாக நடக்கும் மணல் வியாபாரத்திற்காகதான் அந்த பாலம் கட்டப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் கூறுகிறேன். அதுமட்டுமில்லை வயல்வெளி நிறைந்த, மக்கள் போக்குவரத்து இல்லாத அந்த இடத்தில் இந்த பாலம் கட்டுப்பட்டுள்ளது. மழை காலம் என்பதால் அந்த பகுதியில் வேலி அமைத்து அடைத்து வைத்துள்ளனர். ஆதாரத்துடன் பேசுகிறேன்.

பொத்தாம் பொதுவாக பேசவில்லை. எதுக்கும் பயப்படாத நிலையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இதுவும் ஊழல் பட்டியலில் கமிஷன்ராஜ் பற்றி பட்டியல் கொடுத்துள்ளோம். எனவே, அமைச்சர் காமராஜை காமராஜ் என அழைக்காதீர்கள். அது பெருந்தலைவர் காமராஜர் பெயர். அந்த பெயருக்கு இழுக்கு வந்துவிடக் கூடாது. எனவே கமிஷன்ராஜ் என அழையுங்கள். இன்னும் 4 மாதத்தில் ஆட்சி முடிய போகிறது. அதனால், முதல்வர் முதல் அமைச்சர்கள் என அனைவரும் எந்த  அளவுக்கு மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்க முடியுமோ அந்த அளவுக்கு திட்டமிட்டு கொள்ளை அடிக்க செயல்பட்டு வருகின்றனர். நான்கு மாதத்திற்கு பிறகு ஆட்சியில் இருக்க மாட்டோம் என அவர்களுக்கு புரிந்துவிட்டது. எனவே இந்த ஆட்சிக்கு பொதுமக்களாகிய நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். இதையடுத்து, கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு தனித்துறை
மு.க.ஸ்டாலின் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் தர்மபுரி மாவட்டத்தில் 1989ம் ஆண்டு மகளிர் சுய உதவி குழு திட்டத்தை தலைவர் கலைஞர் தொடங்கி வைத்தார். சுய உதவி குழுக்கள் மூலம் சிறு தொழில் செய்ய வங்கி கடன், மானிய தொகை, சுழல்நிதி என பல்வேறு வகையில் மகளிர் பயன்பெற நிதி உதவிகளை வழங்கினார். தன்னம்பிக்கை பெற்றவர்களாக யாருடைய தயவும் எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பதற்காக இத்திட்டங்களை கொண்டு வந்தார். அப்போது துணை முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக நான் இருந்தபோது 5,000 பெண்களாக இருந்தாலும் சரி, 5,000 பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை நானே முன்நின்று வழங்கினேன். தற்போது சுய உதவி குழுக்கள் கடன் பெற லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு என்று தனித் துறை அமைக்கப்பட்டு உடனடியாக கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

* டெல்லி தமிழ் அகாடமி அமைப்புக்கு வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி மாநில அரசு, தமிழ் அகாடமி அமைத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். பரஸ்பர கலாச்சாரத் தொடர்புகளை வளர்க்கவும், தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தவும் இது உதவும். இதனை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஸ் சிசோடியா ஆகியோருக்கு திமுக சார்பில் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kamaraj ,MK Stalin , Minister Kamaraj sells 5.36 lakh tonnes of rice in the external market The accusation of leader MK Stalin
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...