தடை விதிக்கக்கோரிய வழக்கில் விசாரணை மினி கிளினிக்குகளில் பணிபுரிய தனியார் மூலம் நியமனம் ஏன்? அரசு விரிவான பதில்தர ஒருநாள் அவகாசம்

மதுரை: மினி கிளினிக் பணியாளர்களை தனியார் மூலம் நியமிப்பதற்கு காரணம் என்ன என்று விரிவான பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, வளர் நகரை சேர்ந்த வக்கீல் வைரம் சந்தோஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மினி கிளினிக் துவங்குவதற்கான அரசாணை கடந்த டிச. 5ல் வெளியானது. நர்ஸ்களுக்கு சம்பளம் ரூ.14 ஆயிரம், பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 585 மருத்துவ பல்நோக்கு பணியாளர்களும், 1,415 செவிலியர்களும் தனியார் மூலம் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

மனுதாரர் வக்கீல் புகழ்காந்தி ஆஜராகி, ‘‘தனியார் மூலம் நியமனங்கள் முறையாக நடக்க வாய்ப்பில்லை’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீசரண் ரங்கராஜன் ஆஜராகி, ‘‘தேசிய சுகாதார ஆணையத்தின் விதிகளை முறையாக பின்பற்றியே நியமனம் நடக்கிறது. தற்காலிகமாகவே தேர்வு செய்யப்படுகின்றனர். மினி கிளினிக் மூலம் சுமார் 2.4 கோடி பொதுமக்கள் பயன் பெறுவர். தேர்தல் நடவடிக்கைகள் துவங்கினால் கொரோனா நோய் தொற்று பணியில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 630 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் மினி கிளினிக்குகள் முழுமையாக செயல்படும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘ஏன் நர்ஸ்களும், மருத்துவ பணியாளர்களும் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்’’ என கேள்வி எழுப்பினர். அரசுத் தரப்பில் விரிவான பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories:

>