நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட மாட்டோம்: செல்போன் டவர்களை காக்க நடவடிக்கை

புதுடெல்லி: ‘ஒப்பந்த விவசாய தொழிலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனவே செல்போன் டவர் சேதப்படுத்திய விவகாரத்தில் பஞ்சாப் அரசு தலையிட வேண்டும்’ என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த சட்டத்தின் ஒப்பந்த விவசாயம் மூலம் விளைநிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். குறிப்பாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக பலன் பெறும் எனபஞ்சாப் விவசாயிகள் எண்ணுகின்றனர். இதன் காரணமாக, பஞ்சாப், அரியானாவில் பல இடங்களில் ஜியோ செல்போன் டவர்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன. பஞ்சாப்பில் 9000 ஜியோ டவர்களில் 1500 டவர்கள் நொறுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘புதிய வேளாண் சட்டங்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவசாயிகளுடன் ஒப்பந்த முறை விவசாயமும் செய்யவில்லை. எங்கள் நிறுவனத்துக்கு எந்தவிதமான ஆதாயமும் இல்லை. நாங்கள் ஒருபோதும் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் ஒருபோதும் ஈடுபடமாட்டோம். எனவே, பஞ்சாப், அரியானாவில் எங்களின் செல்போன் டவர்களை சிலர் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த இரு மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>