புதுடெல்லி: புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் மத்திய விஸ்டா திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. மத்திய விஸ்டா திட்டம் என்ற பெயரில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான பகுதிகளை மறுசீரமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தற்போது பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடமும் அடங்கும்.
இந்த நிலையில், மத்திய விஸ்டா திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், அடர்ந்த மரங்களுடன் பசுமையாக உள்ள நிலப்பகுதியை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 5ம் தேதி தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.