×

நடப்பாண்டு முதல் வருடத்திற்கு 2 முறை நீட் தேர்வு? தேசிய தேர்வு முகமை பரிந்துரை

புதுடெல்லி: மாணவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக நடப்பாண்டு முதல் வருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை பரிந்துரைத்துள்ளது. மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் நீட் தேர்வை சுமார் 11 லட்சம் மாணவர்கள் எழுதினர். இத்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டுமென மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் தேசிய தேர்வு முகமையிடம் படரிந்துரைக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த தேர்வு முகமை, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘2021ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நாடு முழுவதும் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும்’ என தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக, தேசிய தேர்வு முகமை தரப்பில் இருந்து நேற்று மத்திய சுகாதாரத்துறைக்கு ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,‘‘இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் மாணவர்களின் சிரமம் கண்டிப்பாக குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் முதல் முறையில் நீட் தேர்வு எழுத முடியாமல் போனால், திறமையுள்ள ஒரு மாணவர் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு ஒரு வருடம் முழுவதும் காத்து இருக்க வேண்டிய சூழல் தற்போது உள்ளது. அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பரிந்துரையை மத்திய சுகாதாரத்துறை ஏற்கும் பட்சத்தில் நடப்பாண்டு முதல் வருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும்.

Tags : National Examination Agency , Need to choose 2 times in the first year of the current year? Nominated by National Examination Agency
× RELATED நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை