×

கொரோனா தடுப்பூசி முதல் கட்டம் டெல்லியில் 500 மையம் தயாராகிறது: அமைச்சர் ஜெயின் தகவல்

புதுடெல்லி: முதல் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைக்காக தலைநகரில் 500 மையம் அமைக்கும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார். இந்திய மருந்து கம்பெனிகள் தயாரித்த கோவேக்சின், கோவிஷீல்டு எனும் 2 தடுப்பூசிகளை நடைமுறையில் பயன்படுத்த மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. அது மட்டுமன்றி தடுப்பூசி போடும் முன்னோடி திட்டமாக நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு நாள் சோதனை முயற்சியாக சனிக்கிழமை அன்று மக்களுக்கும் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியும் பரிபூரண திருப்தி அளித்ததால், மருந்து நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன. அதையடுத்து முன்னுரிமை அடிப்படையில் சுகாதார துறை, போலீஸ், முன்கள பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நீண்ட நாள் பல்வேறு நோய் பாதிப்பு உள்ளவர்கள், மாணவர்கள் என தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு பட்டியல் உருவாக்கி அறிவித்தது.

மேலும், விநியோகம் செய்யப்படும் தடுப்பூசியை, 2.8 டிகிரி செல்சியஸ் உறைபனியில் சேகரித்து வைக்க தேவைப்படும் டீப் ஃப்ரீசர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதியை அதிகரிக்கவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், டெல்லி மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியிருப்பது: கொரோனா தடுப்பூசி போட டெல்லியில் 1,000 மையங்கள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் கட்ட தடுப்பூசி நடவடிக்கைக்கு 500 மையம் அமைக்கும் பணி வேகம் பிடித்துள்ளது. தடுப்பூசியை சேகரித்து வைக்க, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 4,700 சதுர அடியில் குளிர்சாதனங்கள் பொருத்தப்பட்ட குடோன் தயாராக உள்ளது. இந்த மையத்தில் இருந்து குளிர் சாதன பெட்டிகளுடன் 500 மையங்களுக்கு தடுப்பூசியை கொண்டு செல்ல வாகனங்களும் தயாராகி வருகிறது. சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் 3 லட்சம், முன்கள பணியாளர்கள் 6 லட்சம் என முதல் கட்டத்தில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். தினமும் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் அடுத்த ஒரிரண்டு நாட்களில் தயாராகிவிடும். தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

உள்கட்டமைப்பு வசதி விவரம்
* ஒரு லட்சம் பேருக்கு தினமும் தடுப்பூசி போட முடியும்.
* தடுப்பூசி மையங்களில் அதிகபட்சமாக 10 பேருக்கு மட்டும் அனுமதி.
* மாஸ்க், சமூக இடைவெளி கடைபிடிப்பதை கண்காணிக்க ஊழியர்கள்.
* பக்கவிளைவு ஏற்படுகிறதா என கண்காணிக்க, தடுப்பூசி போட்ட பின்னர், மையத்தில் அமைத்துள்ள எமர்ஜென்சி அறையில் அரை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
* ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 90 ஃப்ரீசர்கள் தயார்.



Tags : phase ,centers ,Minister Jain ,Delhi , The first phase of the corona vaccine is preparing 500 centers in Delhi: Minister Jain informed
× RELATED மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு...