வாகன சோதனை நடத்தி வசூல்: போலி எஸ்ஐ கைது

அண்ணாநகர்: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் மாதவன்நேற்று முன்தினம் இரவு மாதவரத்தில் டைல்ஸ் லோடு ஏற்றிக்கொண்டு கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றபோது, போலீஸ் தோற்றத்தில் இருந்த வாலிபர் லாரியை வழிமறித்து நிறுத்தி, ‘‘நான் கோயம்பேடு டிராபிக் எஸ்ஐ. வாகனத்தின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்,’’ என்றார். உடனே மாதவன் தனது லைசென்ஸ், இன்ஷூரன்ஸ், ஆர்.சி.புக் போன்றவற்றை காட்டியுள்ளார்.

இதை பார்த்த அந்த வாலிபர், ஆவணங்கள் சரியில்லை எனவும், பணம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்ததால் டிரைவர் மாதவனை அந்த வாலிபர் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், அவர் அலறி சத்தம் போட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அங்கு திரண்டனர். இதனால், அந்த வாலிபர் தப்பிக்க முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து, போலீஸ் அடையாள அட்டை உள்ளதா எனக் கேட்டனர். அவர் இல்லை எனக் கூறியதும், போலீசார் போல் நடித்து பணம் பறிக்க முயன்றதும் தெரிந்தது. அவருக்கு தர்ம அடி கொடுத்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், வடபழனி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் (28) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Related Stories:

>