×

கையெழுத்து போட தெரியாத முதியவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தர மறுப்பு: ரேஷன் கடை ஊழியர்கள் அடாவடி

துரைப்பாக்கம்: கையெழுத்து போட தெரியாத முதியவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தர ரேஷன் கடை ஊழியர்கள் மறுத்ததால் துரைப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு மற்றும் 2,500 வழங்கப்படும், என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, நேற்று முதல் 13ம் தேதி வரை ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் திராட்சை, முந்திரி, 5 கிராம் ஏலக்காய், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம் 200வது வார்டுக்கு உட்பட்ட எழில்முக நகர் பகுதி மக்களுக்கு செம்மஞ்சேரி ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை பெறுவதற்காக காலையில் இருந்தே முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கால்கடுக்க பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 9 மணியளவில் கடைக்கு வந்த ஊழியர்கள், வரிசையில் காத்திருந்தவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினர்.

அப்போது, அங்கிருந்த நோட்டில் கார்டுதாரர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. கையெழுத்து போட தெரியாத முதியவர்கள் கைநாட்டு  வைக்கிறோம் என கூறினர். அதை ஏற்காத கடை ஊழியர்கள், கையெழுத்து போட்டால் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இல்லையென்றால், வழங்க முடியாது என கூறியதோடு, அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால், பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தும், பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Tags : seniors ,Ration shop staff ,Adavati , Pongal gift, ration shop, staff
× RELATED கோவை கல்லூரியில் மீண்டும் ராகிங்: 12...