×

ஆடியோ வெளியானதால் பரபரப்பு: தேர்தல் முடிவை மாற்றுமாறு அதிகாரியை மிரட்டிய டிரம்ப்

வாஷிங்டன்: அதிபர் தேர்ல் முடிவை மாற்றுமாறு ஜார்ஜியா தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்த ஆடியோ பதிவுகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடென் வெற்றி பெற்றுள்ளார். வரும் 20ம் தேதி பதவியேற்கவும் தயாராகி வருகிறார். ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் இன்னும் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் முரண்டு பிடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஜார்ஜியா மாகாண தலைமைத் தேர்தல் ஆணையரிடம் பேசியுள்ளார் டிரம்ப். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது. அதில் தேர்தல் ஆணையருக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் டிரம்ப் பேசி உள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியான பிராட் ரபென்ஸ்பெர்ஜருடன் டிரம்ப் பேசியதை ஒட்டுக் கேட்டதுடன் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

ஜார்ஜியாவில், சுமார் 11,780 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் டிரம்ப். குடியரசுக் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஜார்ஜியாவில் இப்படி நடந்திருக்க சாத்தியமே இல்லை. எனவே, இந்த 11 ஆயிரம் வாக்குகள் எப்படி வந்தன என்பது பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், டிரம்பின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை துல்லியமாகவும், நேர்மையாகவும் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார் பிராட் ரபென்ஸ்பெர்ஜர்.

துணை நீதிபதியாகும் இந்தியர்
இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட விஜய் சங்கரை கொலம்பியா நீதிமன்றத்துக்கு துணை நீதிபதியாகப் பரிந்துரைத்துள்ளார் டிரம்ப். கடந்த ஜூன் மாதத்திலேயே வெளியிடப்பட்டிருந்த உத்தரவின்படி தற்போது பதவியேற்க உள்ளார்.


Tags : Trump , Audio, Election, Trump
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...