×

சந்தேகம் கிளப்பும் நிபுணர்கள்: கோவாக்சினை நம்ப முடியாது

புதுடெல்லி: அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு நிபுணர்களும் சந்தேகம் எழுப்பி உள்ளனர். ஐதராபாத்தின் பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் எதுவும் வெளியிடாத நிலையில் கோவாக்சினுக்கு அனுமதி அளித்தது ஆபத்தானது என்றனர். ஆனால் இந்த மருந்து 110 சதவீதம் பாதுகாப்பானது என மத்திய அரசு வாய்மொழியாக மட்டுமே கூறி வருகிறது. எந்த அறிவியல்பூர்வ தரவுகளையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் கோவாக்சினின் செயல்திறன் குறித்து நிபுணர்களும் சந்தேகம் எழுப்பி உள்ளனர். பிரபல வைராலாஜிஸ்ட் சாகீத் ஜமீல் கூறுகையில், ‘‘கோவாக்சின் 70 சதவீதத்திற்கு மேல் பலன் தந்துள்ளது என கூறுவது நம்பும் படியாக இல்லை.

தடுப்பூசி என்பது நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்தோ, சிகிச்சையோ அல்ல. அது ஆரோக்கியமானவர்களுக்கு நோய் வராமல் தடுக்க பாதுகாப்புக்காக போடப்படுவது. எனவே, பாதுகாப்பும் வீரியமும் தடுப்பூசியில் முக்கியமானது. தடுப்பூசிக்கு அனுமதி தரும் போது பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த தரவுகள் அவசியம். 2ம் கட்ட சோதனையில் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறன் மட்டுமே பரிசோதிக்கப்படும். 3ம் கட்ட சோதனையில் தான் செயல்திறன் நிரூபிக்கப்படும். இதனால்தான் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் முக்கியமாகிறது. இப்படி எந்த அறிவியல் பூர்வ உத்தரவாதமும் இல்லாத ஒரு தடுப்பூசியை மாற்று மருந்தாக எதற்காக அனுமதிக்க வேண்டும். இப்படியான நடவடிக்கை சர்வதேச அளவில் நமது தடுப்பூசிகள் மீதான நம்பகத்தன்மைக்கு வேட்டு வைக்கும்’’ என்றார்.

இங்கிலாந்தில் இருந்து வீரியமிக்க உருமாற்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரசை முழுமையாக கொல்லும் திறன் கோவாக்சினுக்கு இருக்கிறதா என்பதும் சந்தேகம். அது குறித்த எந்த தரவுகளும் இல்லை. ஏற்கனவே உள்ள கொரோனா வைரசையாவது கோவாக்சின் முழுமையாக அழிக்குமா என்பதற்கும் ஆதாரம் இல்லை. அப்படியெனில் இந்த மருந்தை எப்படி நம்ப முடியும் என்றும் நிபுணர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தியாவில் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசிதான் பிரதானமாக பயன்படுத்தப்படும், திடீரென வைரஸ் பாதிப்பு அதிகரித்து, தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மட்டுமே அவசர தேவைக்கு கோவாக்சின் பயன்படுத்தப்படும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீன் குலேரியே ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Experts ,Kovacs , Specialists, covaxin
× RELATED கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினால்...