×

சதம் விளாசினார் கேப்டன் வில்லியம்சன்: வலுவான நிலையில் நியூசிலாந்து: பாகிஸ்தானுக்கு நெருக்கடி

கிறைஸ்ட்சர்ச்: பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் கேப்டன் கேன் வில்லியம்சன் சதம் விளாசியதை அடுத்து நியூசிலாந்து அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. நியூசிலாந்து - பாகிஸ்தானுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதல்  இன்னிங்சில் எல்லா விக்கெட்டையும் இழந்து  297 ரன் எடுத்தது (83.5ஓவர்). அசார் அலி 93, கேப்டன் ரிஸ்வான் 61, பாஹீம் அஷ்ரப் 48, ஜாபர் கோஹர் 34, அபித் அலி 25 ரன் எடுத்தனர்.

நியூசி. பந்துவீச்சில் ஜேமிசன் 5, சவுத்தீ, போல்ட் தலா 2, ஹென்றி 1 விக்கெட் வீழ்த்தினர். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
2வது நாளான நேற்று நியூசி. முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம், டாம் பிளண்டெல் நிதானமாக விளையாடினர். அணி 50 ரன்னை கடந்தபோது பிளண்டெல் 16 ரன்னில் பாஹீம் அஷ்ரப் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்த ஓவரிலேயே ஷாகீன் அப்ரிடி வேகத்தில்  லாதம் 33 ரன்னில் வெளியேறினார். அடுத்த வந்த ராஸ் டெய்லர் 12 ரன் எடுத்து  முகமது அப்பாஸ் பந்துவீச்சில் ஷான் மசூத் வசம் பிடிபட்டார்.

நியூசி. 30 ஓவரில்  71 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சற்றே திணறிய நிலையில், கேப்டன் வில்லியம்சன் - ஹென்றி நிக்கோல்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் அடுத்தடுத்து அரை சதத்தை கடந்தனர். இந்த ஜோடியை பிரிக்க பகுதி நேரப்பந்து வீச்சாளர்கள் உட்பட 7 வீரர்கள் மாறி மாறி பந்துவீசியும் பலன் கிடைக்கவில்லை. அபாரமாக விளையாடிய வில்லியம்சன் 140 பந்துகளில் தனது 24வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். முதல் 50 ரன்னை 105 பந்துகளில் எட்டியவர், அடுத்த 50 ரன்னை வெறும் 35 பந்துகளில் விளாசினார். இவர் மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் சதம் விளாசியது (129) குறிப்பிடத்தக்கது.

2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசி. 85 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. வில்லியம்சன் 112 ரன் (175பந்து, 16பவுண்டரி), நிக்கோல்ஸ் 89 ரன்னுடன் (186பந்து, 8பவுண்டரி) களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க நியூசி. அணி 11 ரன் மட்டுமே பின்தங்கியுள்ளதால் முதல் இன்னிங்சில் மிகப் பெரிய முன்னிலை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடியுடன் இன்று 3வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.


Tags : Williamson ,New Zealand ,Pakistan ,Crisis , Century, Captain Williamson, New Zealand
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...