இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை: பிசிசிஐ அறிவிப்பு

மெல்போர்ன்: இந்திய அணி வீரர்கள் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆகியோர் தொற்று அச்சுறுத்தல் இல்லாத ‘பயோ பபுள்’ எனப்படும் பாதுகாப்பான சூழலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் ரோகித், பன்ட், பிரித்வி, கில், சைனி ஆகியோர் ஒரு உணவகத்துக்கு சென்றிருந்தபோது விதிகளை மீறி உள்ளரங்கில் அமர்ந்து இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அதை வெளியிட்ட ரசிகர் தான் ரிஷப் பன்ட்டை கட்டித் தழுவியதாக தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 5 வீரர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டதுடன் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.  3வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி சிட்னி செல்ல வேண்டி இருந்ததால் நேற்று முன்தினம் வீரர்கள், அணி நிர்வாகிகள்  அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அனைவரும் தனி  விமானம் மூலம் சிட்னி புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் இந்திய அணியினருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. அதனால் இந்திய அணி நிர்வாகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது. ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

Related Stories:

>