×

திருப்போரூர் அருகே பரபரப்பு: இருளர் மக்கள் வசித்த குடிசைகளை அகற்றி வீசி எறிந்த கிராம மக்கள்: ஆக்கிரமிப்பு செய்ததாக புகார்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே சிறுங்குன்றம் கிராமத்தில், நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதாக கூறி, இருளர் மக்கள் வசித்த குடிசை வீடுகளை, கிராம மக்கள் அகற்றி எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் ஒன்றியம் சிறுங்குன்றம் கிராமத்தில் 6 இருளர் பழங்குடியினர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நிரந்தர வீடு இல்லாததால், அங்கிருந்த மேயக்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தற்காலிக குடிசை அமைத்தனர். இதையறிந்த திருப்போரூர் ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் சொந்த வீடு இன்றி சாலையோரங்களில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள், சிறுங்குன்றம் கிராமத்தில் தற்காலிக குடிசை அமைத்தனர்.

இந்நிலையில், சிறுங்குன்றம் கிராம மக்கள், கிராமத்தின் மேயக்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வெளியூர் ஆட்கள் குடிசை அமைத்து குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மதியம் கிராம மக்கள் சிலர், மேற்கண்ட பகுதிக்கு சென்று, தற்காலிக குடிசைகளை அகற்றி எறிந்தனர். இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.

தகவலறிந்து, திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சங்கர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வாசுதேவன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் அழகேசன், திருப்போரூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் லிங்கன் ஆகியோர் அங்கு சென்று அதிகாரிகள் மற்றும் இருளர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, ஏற்கனவே குடியிருந்த 6 குடும்பங்கள் அதே கிராமத்தில் வசிக்க கிராம மக்கள் சம்மதம் தெரிவித்தனர். அப்போது, பல்வேறு ஊர்களில் இருந்து வந்து சிறுங்குன்றம் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என கிராம மக்கள் தரப்பில் வலியுறுத்தப் பட்டது. இதைதொடர்ந்து திருப்போரூர் வட்டாட்சியர் ரஞ்சனி உத்தரவின் பேரில், கரும்பாக்கம் வருவாய் ஆய்வாளர் ரேவதி, சிறுங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் முரளி ஆகியோர் ஒவ்வொரு கிராமத்திலும் வீடு இல்லாத இருளர் பழங்குடியினர்களை கணக்கெடுப்பு செய்து, அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு பழங்குடியினர் அவரவர் ஊர்களுக்கு சென்றனர்.

Tags : Thiruporur , Thiruporur, excitement, dark people, villagers
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...