×

கால்வாய் அமைக்காமல் நடைபெறும் சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் சாலை அமைப்பதற்கு முன்பாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என சாலை போடும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, 13வது வார்டில் உள்ள மாதா மண்டபம் தெருவில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் மாணவ - மாணவிகள் என 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக ஊத்துக்கோட்டை பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழையால் மாதா மண்டபம் தெருவில் மழைநீர் தேங்கி நின்றது.

இதனால், வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவிகள் மற்றும் அப்பகுதி மக்கள் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டது. இதனால், சிறியவர்கள், முதியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து கடந்த வருடம் ஜூலை மாதம் மாதா மண்டபம் தெரு மக்கள் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் புதிய சாலை கோரி மனு கொடுத்தனர். அதன்பிறகு அப்போதைய பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு மாதா மண்டப தெருவிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, ‘மக்களிடம் மழைநீர் வடிவதற்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும். 3 மாதத்திற்குள் புதிய சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்று உறுதியளித்தார்.

இந்நிலையில், மாதா மண்டபம் தெருவில் பேரூராட்சி மூலம் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு இரு தினங்களுக்கு சாலை போடும் பணிகள் தொடங்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் சாலை போடும் முன்பு சாலையில் மழைநீர் தேங்காதவாறும், கழிவுநீர் செல்லவும் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை சாலை போட வந்தவர்களை போடவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், ஒப்பந்தக்காரர் சாலை போடாமல் திரும்பிச்சென்றார். இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : public , Uthukottai, road work, public
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...