×

தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி அமித்ஷா 14ம் தேதி சென்னை வருகை: அதிமுகவுடன் கூட்டணியா, 3வது அணியா என முடிவு; நடிகர் ரஜினிகாந்த்தையும் சந்திக்க திட்டம்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 14ம் தேதி சென்னை வருகிறார். அப்போது அவர் தொகுதிப் பங்கீடு இழுபறி குறித்தும், அதிமுகவுடன் கூட்டணியா அல்லது 3வது அணி அமைப்பதா என்பது குறித்தும் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் ரஜினியையும் சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணி வர உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து சர்ச்சையும், மோதலும் நீடித்து வருகிறது.

அதிமுக தரப்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதை தமிழக பாஜ தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து சென்னை வந்த மத்திய அமைச்சர்களும் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்ளவில்லை. யார் முதல்வர் வேட்பாளர் என்பதை டெல்லி தலைமை தான் முடிவு செய்யும். அதை அதிமுக முடிவு செய்ய முடியாது என்று கூறினர். சில மத்திய அமைச்சர்கள் அந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து வந்தனர். பாஜவினரின் இந்த செயலுக்கு அதிமுக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் கூட்டணிக்கு வாருங்கள். இல்லா விட்டால் கூட்டணி என்பது கிடையாது என்று கூறி விட்டனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். அப்போது அவர் பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். பாஜ சார்பில் போட்டியிட வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 100 தொகுதிகளுக்கான பட்டியலையும் அளித்தார். இதனை இபிஎஸ், ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. உங்களுக்கு இவ்வளவு தொகுதிகள் வழங்கினால் கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக அதிக தொகுதிகளை கேட்பார்கள்.

அதனால், இவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று அதிமுக தரப்பில் கறாராக கூறப்பட்டு விட்டது. கடைசியாக 34 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதித்தது. ஆனால், 60 தொகுதிகள் வேண்டும். நாங்கள் புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய கல்வி மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு நாங்கள் சீட் வழங்கி விடுகிறோம் என்று கூறினார். ஆனால் இதற்கு அதிமுக தலைமை சம்மதிக்கவில்லை. இதனால், கூட்டணி உருவாவதில் தொடர்ந்து சிக்கல் உருவாகி வருகிறது. அதனால் தான் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக பாஜ, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் ஒரிரு நாளில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம், இரண்டு நாளில் அறிவிப்போம் என்று அறிவிப்போம் என்று பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் வருகிற 14ம் தேதி சென்னை வர உள்ளார். சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் அமித்ஷா சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தையை அமித்ஷா நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. அப்போது பாஜக தரப்பில் கேட்கும் சீட்களை கண்டிப்பாக தர வேண்டும் என்று அமித்ஷா அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளார். இதனால், அமித்ஷா சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் பாஜக கேட்கும் தொகுதிகளை அதிமுக ஒதுக்காத பட்சத்தில், பாமக, தேமுதிக மற்றும் சிறிய கட்சிகளை இணைத்து 3வது அணி அமைத்து போட்டியிடவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் பாஜக தொடருமா? அல்லது கூட்டணி உடையுமா?. என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்த களேபரத்துக்கு மத்தியில் 38 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியல் நேற்று சமூக வலைதளங்களில் உலா வந்தது. டெல்லியில் உள்ள மேலிடம் எவ்வளவு தொகுதி, யார் வேட்பாளர்? என்பதை அவர்கள் தான் அறிவிப்பார்கள். அப்படியிருக்கும் சூழ்நிலையில் தற்போது வெளியான பட்டியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பட்டியல் விவரத்தை தமிழக பாஜகவினர் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக தரப்பில் இருந்து உளவுத்துறை மூலமாக இது போன்ற தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் பாஜக தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

* அதிமுகவுக்கும் அதன் கூட்டணியில் உள்ள பாஜவுக்கும் தொடர்ந்து உரசல் இருந்து வருகிறது.
* முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை இன்னும் பாஜ ஏற்கவில்லை.
* இந்த பனிப்போரால் அதிமுக-பாஜ இடையே தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடிக்கிறது.
* இப்பின்னணியில் அமித்ஷா 14ம் தேதி சென்னை வருகிறார்.
* கேட்கிற இடங்களை தர வேண்டும் என அவர் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

Tags : Amit Shah ,Rajinikanth ,Chennai , Amit Shah arrives in Chennai on the 14th to decide on alliance with AIADMK Plan to meet actor Rajinikanth too
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...