பீகாரில் மதுவிலக்கு சட்டம் தோல்வியில் முடிந்தது; புரோக்கர்களின் பிடியில் காவல் நிலையங்கள்: ஆளும் கூட்டணியின் பாஜக எம்பி திடீர் தர்ணா

பாட்னா: பீகாரில் மதுவிலக்கு சட்டம் தோல்வியில் முடிந்தது என்றும், புரோக்கர்களின் பிடியில் காவல் நிலையங்கள் உள்ளதாகவும் ஆளும் கூட்டணியின் பாஜக எம்பி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான முந்தைய ஆட்சி காலத்தில் மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்பட்டது. இருந்தும் கள்ளச் சந்தையில் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பேரவை தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதால், நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானார்.

இந்நிலையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அவுரங்காபாத் தொகுதி பாஜக எம்பி சுஷில் குமார் சிங், அவுரங்காபாத் அடுத்த ரபிகஞ்ச் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், பீகாரில் மதுவிற்கு தடை செய்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபடும் புரோக்கர்களின் பிடியில் காவல் நிலையங்கள் மாறிவிட்டன. காவல்துறையினர் தங்கள் பகுதிகளில் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்வதற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவ்வப்போது கணக்குக்காக சிலர் மீது வழக்குபதிவு செய்கின்றனர்.

உள்ளூர் பாஜக தொண்டர்கள் இருவரை பிடித்து போலீசார் தாக்கி, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். போலீஸ் காவலில் இருந்த இருவரில் ஒருவரை கடுமையாக போலீசார் தாக்கி உள்ளனர். அந்த நபர் ஒருபோதும் மது அருந்தவில்லை. போலீஸ் நடவடிக்கையால், மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது’ என்றார். இதுகுறித்து, மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் சந்திர மிஸ்ரா கூறுகையில், ‘சொல்லுவதற்கு என்ன புதியதாக இருக்கிறது? சட்டஒழுங்கு பிரச்னையில் கவனம்  செலுத்துவதை விட்டுவிட்டு, பீகார் காவல்துறையினர் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.

அவ்வாறு சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டதாகக்  கண்டறியப்படும் போலீசாரை, உயரதிகாரிக் துறை ரீதியான நடவடிக்கை கூட எடுப்பதில்லை’ என்றார். சம்பவம் குறித்து அவுரங்காபாத் போலீஸ் எஸ்பி சுதிர் குமார் பொரிகா கூறுகையில், ‘எம்பி சுஷில் குமார் சிங் அளித்த புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>