10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு?.. 8-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் வரும் 8ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த பள்ளி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து கொண்டு இருந்தபோதே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தேர்வின் இறுதி நாளான அன்று தொற்றின் வேகம் அதிகரித்தது.

தேர்வு முடிந்த மறுநாளான மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கீழ் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.  பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும், 9,10,பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வகையில் பள்ளிகளும் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது.

இருப்பினும், கொரோனா தொற்று முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப முடியாது என்ற பெற்றோர் ஒட்டுமொத்தமாக மறுத்தனர். தமிழக அரசின் பள்ளி  திறப்பு அறிவிப்பிற்கு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9-ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதன் முடிவின் பேரில் பள்ளிகள் திறப்பை அரசு தற்காலிகமாக ரத்து செய்தது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் வரும் 8-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; “10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது இன்றியமையாதது. பள்ளிகள் திறப்பது குறித்து 10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதிவரை கருத்து கேட்பு நடைபெறும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பெற்றோரை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்க வேண்டும்.

பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிகளின் வசதிக்கேற்ப கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். பெற்றோரிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களை முதன்மை கல்வி அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையை தொகுத்து பள்ளி கல்வி இயக்ககத்திற்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>