×

350 வருடங்கள்... உலகின் பழமையான தொப்பிக் கடை!

நன்றி குங்குமம்

Family Tree-


திரைப்பட மேதை சார்லி சாப்ளினின் அடையாளங்களில் ஒன்றான பவுலர் தொப்பி, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மிடுக்கான தொப்பி முதல் இளவரசி கேத் மிடில்டனின் ஸ்டைலீஷான் தொப்பி வரை உலகப் பிரபலங்களின் தலைகளை அலங்கரித்த நிறுவனம் ‘லாக் அண்ட் கோ’.
லண்டனில் வீற்றிருக்கும் உலகின் பழமையான தொப்பிக்கடை இது. அத்துடன் உலகின் 34வது பழைய குடும்ப பிசினஸும் கூட.ஆண் அல்லது பெண், உள்ளூர்வாசி அல்லது லண்டனுக்குச் சுற்றுலா வந்தவர், புது வாடிக்கையாளர் அல்லது உலகப் பிரபலம்... என யாராக இருந்தாலும் ஒரே மாதிரியாக அணுகுவது லாக் அண்ட் கோவின் தனித்துவம்.

*ஜேம்ஸ் லாக்

இரண்டாம் சார்லஸின் ஆட்சியின் கீழ் இங்கிலாந்து இருந்த காலகட்டம் அது. லண்டன் மாநகரில் சொந்தமாக தொப்பி தயாரித்து விற்பனை செய்து வந்தார் ராபர்ட் டேவிஸ். அரசர்கள், நிலப்பிரபுக்கள் போன்ற வசதிபடைத்தவர்கள்தான் இவருடைய வாடிக்கையாளர்கள். மேல்தட்டு மக்களின் ஃபேஷன் தாகத்தை பூர்த்தி செய்வதற்காக 1676ம் ஆண்டு லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் தெருவில் ஒரு தொப்பிக் கடையைத் திறந்தார் ராபர்ட்.

அதே ஜேம்ஸ் தெருவில் கடை எண் 6ல் ஜார்ஜ் லாக் என்பவர் ஒரு காபிக்கடை வைத்திருந்தார். அங்கே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமான காபி, சாக்லேட், புகையிலை விற்பனை அமோகம். 18ம் நூற்றாண்டில் தொப்பிக்கடை, ராபர்ட் டேவிஸின் மகன் சார்லஸ் டேவிஸின் கைக்கு மாறியது.

1747ம் வருடம் ஜார்ஜ் லாக்கின் பேரன் ஜேம்ஸ் லாக், தொப்பி தயாரிக்கும் பயிற்சியாளராக சார்லஸிடம் வேலைக்குச் சேர்ந்ததுதான் திருப்புமுனை.
ஆம்; 1759ல் சார்லஸ் டேவிஸின் ஒரே மகள் மேரியைத் திருமணம் செய்கிறார் ஜேம்ஸ். அதே வருடத்தில் சார்லஸ் இறந்து விடுகிறார். தொப்பிக்கடையின் சாவிக் கொத்து ஜேம்ஸ் லாக்கின் வசமாகிறது.

1765ல் தொப்பிக்கடையை எண் 6, செயின்ட் ஜேம்ஸ் தெருவுக்கு இடம் மாற்றுகிறார் ஜேம்ஸ். இதே இடத்தில் ‘லாக் அண்ட் கோ’ என்ற பெயரில் இன்றும் செயல்பட்டு வருகிறது அந்த தொப்பிக்கடை. லாக் அண்ட் கோவிற்கு வேறு எங்கேயும் கிளைகள் இல்லை. குறிப்பிட்ட சில பிராண்ட் ஷோரூம்களில் இதன் தொப்பிகள் விற்பனைக்குக் கிடைக்கும்.
 
*முக்கிய சம்பவங்கள்

நியூயார்க்கைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர், 1781ம் வருடம் நீர் நாயின் ரோமத்தில் வடிவமைக்கப்பட்ட தொப்பிக்கு ஆர்டர் கொடுக்கிறார். இதற்குப் பிறகுதான் உலக செல்வந்தர்களின் மத்தியில் லாக் அண்ட் கோவின் பெயர் அறிமுகமாகிறது. இங்கிலாந்திலிருக்கும் ராஜகுடும்பத்தினர்களும் வசதி படைத்தவர்களும் கடையை மொய்க்க ஆரம்பித்தனர்.

18ம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஆண்கள் மத்தியில் விதவிதமான விக் வைப்பது ஃபேஷன். அந்த விக் முடிகளுக்கு பளிச் என்று வண்ணமூட்டவும் பராமரிக்கவும் ஒரு பவுடர் இருந்தது. போர்க் காலத்தின் நிதித் தேவைக்காக 1795ல் அந்தப் பவுடருக்கு வரி விதித்தது இங்கிலாந்து அரசு. வரி செலுத்தாமல் விக்கைப் பயன்படுத்தினால் அபராதம் வேறு. அதனால் விக்கின் இடத்தை தொப்பி பிடித்துக் கொண்டது; புதிய ஃபேஷனாகவும் பரிணமித்தது.

ஜேம்ஸ் லாக்கிற்கு 24 மணி நேரம் போதவில்லை. வாடிக்கையாளர்கள் சில மாதங்கள் காத்திருக்கும் அளவிற்கு ஆர்டர்கள் குவிந்தன.1797ல் ஆடம்பரமான, விலைஉயர்ந்த தொப்பிகளுக்கு விதை தூவப்பட்டது. தரமான பட்டினால் ஆன தொப்பியை அறிமுகப்படுத்தியது லாக் அண்ட் கோ.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கப்பற்படை அதிகாரி நெல்சன். போரில் ஒரு கண்ணை இழந்தவர். 1800ல் முதல் முறையாக லாக் அண்ட் கோவிற்கு வந்தார். பார்வையற்ற அவரது கண்ணை மறைக்கும் விதமாக பிரத்யேகமான ஒரு தொப்பி வடிவமைக்கப்பட்டது. அந்தத் தொப்பி பிடித்துப் போக, அடுத்த சில வருடங்களில் இரண்டு தொப்பிகளுக்கு ஆர்டர் கொடுத்தார். 1805ல் ஸ்பெயினுக்குப் போவதற்கு முன் லாக் அண்ட் கோவிற்கு வந்து வாங்கிய தொப்பிகளுக்கான தொகையைத் தருவதாகச் சொல்லியிருந்தார். அதற்குள் போரில் அவர் இறந்துவிட்டார். அவர் அணிந்த தொப்பி போர் வீரர்களிடையே பிரபலமாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டது.

1806ல் ஜேம்ஸ் லாக் மரணமடைகிறார். அவருக்கு முறை தவறி பிறந்ததாகக் கருதப்படும் மகன் ஜார்ஜ் ஜேம்ஸ் லாக் பொறுப்புக்கு வருகிறார். 1821ல் தனது மகன் மூன்றாம் ஜேம்ஸ் லாக்கிடம் பிசினஸை ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்கிறார் ஜார்ஜ் ஜேம்ஸ் லாக்.
வேட்டைக்காரர்களிடமிருந்து தனக்குச் சொந்தமான எஸ்டேட்டையும் அதிலுள்ள உயிர்களையும் பாதுகாக்க ‘கேம் கீப்பர்’ என்று அழைக்கப்படும் காப்பாளர்களை நியமித்திருந்தார் நிலப்பிரபு எட்வர்ட் கோக்.

காப்பாளர்கள் அணியும் தொப்பி சரியாகப் பொருந்தாமல் விரைவிலேயே சேதமாகிவிடுவதைக் கண்டார். 1849ல் லாக் அண்ட் கோவை அணுகி காப்பாளர்களுக்காக பிரத்யேகமான தொப்பியை வடிவமைக்க ஆர்டர் கொடுத்தார். முதன்மை தொப்பி வடிவமைப்பாளர் தாமஸ் பவுலர் வட்ட வடிவிலான ஒரு தொப்பியைக் காப்பாளர்களுக்காக டிசைன் செய்தார். இந்த தொப்பியை கோக் தொப்பி மற்றும் பவுலர் தொப்பி என்று அழைக்கின்றனர்.

எட்வர்டின் எஸ்டேட்டில் ஒரு வருடம் சிறப்பாக வேலை செய்யும் காப்பாளர்களுக்கு பவுலர் தொப்பி பரிசாக வழங்கப்பட்டது. சார்லி சாப்ளினின் விருப்பமான தொப்பி இது. 1852ல் தொப்பியை துல்லியமாக வடிவமைக்க தலையை அளவிடும் கருவி அறிமுகமானது. இந்தக் கருவியை இப்போதும் பயன்படுத்துகிறது லாக் அண்ட் கோ.

எழுபது வயதாகியும் மூன்றாம் ஜேம்ஸ் லாக்கிற்குத் திருமணம் ஆகவில்லை. 1871ல் தனது சகோதரியின் மகன் சார்லஸை பிசினஸுக்குள் கொண்டு வந்தார். சார்லஸுக்குத் தொப்பி பிசினஸில் அனுபவமில்லை. அதனால் கடையின் மேனேஜர் ஜேம்ஸ் பென்னிங்குடன் சார்லஸைக் கூட்டு சேர்த்து பிசினஸை வழிநடத்த வழிகாட்டினார் மூன்றாம் ஜேம்ஸ் லாக். அதனால் குடும்ப பிசினஸ் தொடர்ந்தது.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஸ்கர் வைல்டு, லாக் அண்ட் கோவின் முக்கிய வாடிக்கையாளர். கருப்பு ஃபெடோரா தொப்பியின் பெரும் விசிறி இவர். சில காலம் சிறையில் இருந்ததால் கடைசியாக வாங்கிய தொப்பிக்கு உண்டான தொகையான 3.30 பவுண்டை அவர் செலுத்தவில்லை.

இந்தக் கதை 100 வருடங்களுக்குப் பிறகு 2000ம் ஆண்டில் ஒரு பத்திரிகையில் வெளியானது. இதைப் படித்த ஆஸ்கர் வைல்டின் தீவிர வாசகர் ஒருவர், 3.30 பவுண்டுக்கான காசோலையை லாக் அண்ட் கோவுக்கு அனுப்பியிருக்கிறார்.

அந்தக் காசோலை ப்ரேம் செய்யப்பட்டு கடையின் சுவரில் இன்றும் தொங்கிக் கொண்டிருக்கிறது.இரண்டாம் உலகப்போரின் காலம். 1940ல் கடையின் மீது குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்ட வசமாக பெரிய சேதமின்றி தப்பித்தது லாக் அண்ட் கோ.1952ம் ஆண்டு முதல் முறையாக கடைக்கு வருகை புரிந்தார் சார்லி சாப்ளின். ஆனால், 1912, 1913 மற்றும் 1922ம் வருடங்களிலேயே தொப்பிக்கான ஆர்டரை லாக் அண்ட் கோவிற்கு கொடுத்திருக்கிறார் சார்லி. அவரின் ஆர்டர் ரசீதை பொக்கிஷமாகப் பாதுகாக்கின்றனர்.

1976ல் குடும்ப பிசினஸின் 300வது வருடம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.1993ல் பெண்களுக்கான தொப்பி தயாரிப்பு தொடங்கியது.இரண்டாயிரத்துக்குப் பிறகு உலகின் முன்னணி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து புதுவிதமான தொப்பிகளை வடிவமைத்து
வருகிறது. இதன் மூலம் ஃபேஷன் உலகில் அசைக்க முடியாத இடத்தில் தனது பெயரைத் தக்க வைத்துக்கொள்கிறது லாக் அண்ட் கோ.

*கொள்கைகள்

பிசினஸைக் கையில் எடுக்கும்போது இருந்த வளர்ச்சியைவிட, அதிக வளர்ச்சியுடன் பிசினஸை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். இது ஒவ்வொரு தலைமுறையின் கடமை.

பிசினஸைக் கையில் எடுக்கப்போகிறவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே கடைக்கு வரவழைக்கப்படுகின்றனர். அந்தக் குழந்தைகளிடம் குடும்ப பிசினஸின் வரலாற்றையும் பெருமைகளையும் பிசினஸையும் சொல்லிக்கொடுப்பதை ஒரு சடங்கு போலவே பின்பற்றுகின்றனர்.

*தயாரிப்புகள்

ஆண்களுக்கான ப்ளாட், பவுலர், பேஸ்பால், பேக்கர்பாய், வாட்டர் ப்ரூப், பனாமா என்று  அனைத்துவிதமான தொப்பிகள். பெண்களுக்குரிய நவீன தொப்பிகள், தலைக்கச்சு, தலைப்பாகை, முகத்திரை.

*இன்று

வருடத்துக்கு ஆயிரம் தொப்பிகளாவது விற்பனையாகின்றன. கொரோனா காலத்தில் இங்கி லாந்தின் தேசிய சுகாதாரப் பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது லாக் அண்ட் கோ. குறிப்பாக கடந்த மே, ஜூன் மாதங்களில் கிடைத்த லாபத்தில் 10 சதவீதத்தை தேசிய சுகாதாரப் பணியாளர்களுக்காக ஒதுக்கியிருக்கிறது. தவிர, 200 மாஸ்க்குகளையும் 100 கைக்குட்டைகளையும் அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது.லாக் அண்ட் கோவின் மாஸ்டர் வடிவமைப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட இந்த மாஸ்க்குகள் மற்றும் கைக்குட்டைகளின் மதிப்பு பல லட்சங்களில் இருக்கும்.

கடந்த 344 வருடங்களில் லாக்டவுன் காலத்தில் மட்டும் இரண்டு முறை கடை மூடப்பட்டிருக்கிறது. லண்டனுக்குச் சுற்றுலா வருபவர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் 15 சதவீத விற்பனை நடக்கிறது. 50 சதவீத வாடிக்கையாளர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். 80 சதவீத வருமானம் ஆண் வாடிக்கையாளர்களால் கிடைக்கிறது. பெண்களின் பிரிவு இப்போதுதான் வேகமாக வளர்ந்து வருகிறது.

கோடைகாலத்தில் அணியும் தொப்பி 8,500 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. பழமையான பட்டுத் தொப்பி 10 லட்ச ரூபாய்க்கும் இருக்கிறது. ஏழாம் தலைமுறையைச் சேர்ந்த ரோஜர் ஸ்டீபன்சன் துணை சேர்மனாக உள்ளார். நிர்வாக இயக்குனராக கடையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறார் பென் டால்ரிம்பிள். 2019ம் வருடத்தின் ஆண்டு வருமானம் 25 கோடி ரூபாய்!

புத்தகங்களும் திரைப்படங்களும்

சார்லி சாப்ளின், ஜாக்கி சான், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த சீன் கானரி, பியர்ஸ் பிராஸ்னன் உட்பட பல ஹாலிவுட் நடிகர்கள் தங்களின் படங்களில் லாக் அண்ட் கோவின் தொப்பிகளை அணிந்து நடித்துள்ளனர். நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் லாக் அண்ட் கோவின் வாடிக்கையாளர்கள்.‘The history of James Lock & Co., hatters: And some account of the Lock family’ என்ற புத்தகமும் வெளியாகியுள்ளது.

த.சக்திவேல்



Tags : hat shop ,world , Hat shop
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...