×

திமுக ஆட்சியில் தான் இலவச மின்சாரம், விவசாயிகள் கடன் தள்ளுபடி.. தமிழகத்தில் 4 மாதங்களில் ஆட்சி மாற்றத்திற்கு நாங்க ரெடி... நீங்க ரெடியா? :மு.க.ஸ்டாலின்

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியம் அவளிவநல்லூர் ஊராட்சியில் இன்று காலை நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:கிராமசபை கூட்டத்தில் பெண்கள் அதிகம் வருகிறார்கள். ஆண்களுக்கு சமமாக பெண்களும் பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்களும் இருக்கிறார்கள். தந்தை பெரியார் 1949 ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசினார். அப்போது, பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்க வேண்டும் என பேசினார்.

அதனை 1989 தலைவர் கருணாநிதி நிறைவேற்றினார். உள்ளாட்சி தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை முதலில் அமல்படுத்தினார்.பெண்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 5000 பெண்கள் இருந்தாலும் 5000 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை நானே முன் நின்று வழங்கினேன்.ஏழை எளிய பெண்கள் திருமண உதவி திட்டம், ஆரம்ப பள்ளிகளில் முழுக்க முழுக்க பெண்கள் ஆசிரியர்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்கள் முன்னேற்றத்திற்கு திமுக ஆட்சியின்போது கருணாநிதி கொண்டு வந்துள்ளார். இன்னும் நான்கே மாதத்தில் ஓர் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. அதற்கு நான் ரெடி. நீங்க ரெடியா?

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது திமுக ஆட்சியில் தான். எடப்பாடி பச்சைத்துண்டு போட்டுக் கொண்டால் விவசாயி அல்ல. பச்ச துரோகி. டெல்லியில் 39 நாட்களாக விவசாயிகள் போராடுகிறார்கள். மத்திய அரசு சிறிது கூட கண்டுகொள்ளவில்லை. வேளாண் சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என கூறி நாடுமுழுவதும் உள்ள பாஜக அல்லாத முதல்வர்கள் இதனை எதிர்த்து தீர்மானம் போடுகிறார்கள். விவசாயி என்று கூறும் எடப்பாடி எதிர்த்து தீர்மானம் போட வில்லை. ஆனால் அதை ஆதரித்து பேசி வருகிறார். இதைவிட வெட்கக்கேடு என்ன இருக்க முடியும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் ₹7 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தது திமுக ஆட்சியில் தான். இதில் அதிகம் பயன் பெற்றது அதிமுகவினர் தான்.

மகளிர் சுய உதவி குழு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதற்காகத்தான் இந்த ஆட்சியில் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவி குழுவுக்கு என்று தனி துறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு உடனடியாக கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கஜா புயலின் போது அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இதுவரை பல பகுதிகளுக்கு நிவாரணம் சென்றடையவில்லை. தற்போது புரெவி புயல், நிவர் புயல் வந்தது. ஆனால் இது வரை விவசாயிகளுக்கு நிவாரணம் என்பது வழங்கப்படாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தின் முடிவில் அதிமுகவை நிராகரிப்போம் என ஸ்டாலின் கூற, திரும்ப மக்கள் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காமராஜ் அல்ல கமிஷன் ராஜ்

மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘மத்திய மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் 110 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. தூர்வாரும் திட்டத்தில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. அமைச்சர் காமராஜர் உண்ணும் உணவில் ஊழல் செய்துள்ளார். அமைச்சர் காமராஜரை காமராஜ் என்று அழைக்காதீர்கள். அது பெருந்தலைவர் காமராஜர் பெயர். அந்த பெயருக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது. எனவே கமிஷன்ராஜ் என்று அழையுங்கள். பினாமிகளை வைத்து கொண்டு மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதற்காக மக்கள் வரி பணத்தில் தனியாக பாலமே போட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருப்பதை விட உங்களுக்கு தான் அதிகம் உள்ளது. கரெப்ஷன், கமிஷன், கலெக்ஷன் என நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய ஆட்சி தான் இந்த ஆட்சி. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றார்.

Tags : DMK ,regime change ,Tamil Nadu ,MK Stalin , DMK, in power, electricity, farmers, loans, discounts, we are ready, you are ready, MK Stalin
× RELATED பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்