×

தரமற்ற உணவுகள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம்-உணவு பாதுகாப்புத்துறை தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தரமற்ற உணவுகள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை போன்ற புகார்களை வாட்ஸ் மூலம் தகவல் அனுப்பலாம் என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறதா? என அவ்வப்போது உணவு பாதுகாப்புத்துறையினர் கடைகள், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

 ஆய்வில் காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதுதவிர கலப்பட டீத்தூள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என கூறி கலப்பட தேயிலைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதனிடையே கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பின் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு இங்குள்ள ஓட்டல்களில் தரமான உணவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், உணவு குறித்த புகார்களை பெற வசதியாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சந்திப்பு, கோடநாடு காட்சி முனை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்கள், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பஸ் நிலையங்கள், ஊட்டி ரயில் நிலையம், மார்க்கெட் பகுதிகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உணவு மற்றும் உணவு பொருட்கள் கலப்படம் மற்றும் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில் வாட்ஸ் ஆப் புகார் அளிக்கும் எண் அடங்கிய அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறுகையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கடைகள், ஓட்டல்களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வுகளின்போது காலாவதியான, தரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஓட்டல்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் திரும்ப பயன்படுத்தக்கூடாது.

சாப்பிடுவதற்கு தகுதியில்லாத பழைய உணவுகள், பலகாரங்கள் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் கடையின் உாிமம், பதிவு ரத்து செய்யப்படும்.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போலி கலப்பட டீத்தூள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், உணவின் தரம் குறித்த புகார்களை 94440 42322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ புகார் அளிக்கலாம், என்றார்.

Tags : public , Ooty: Complaints of substandard food and sale of illicit drugs in the Nilgiris district have been reported by Watts
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...