விருதுநகர் டவுன்பஸ்களுக்கு விடிவுகாலம் எப்போது?பஸ்சுக்குள் குடை பிடிக்கும் பயணிகள்-ஓட்டை, உடைசலால் மழைநீர் ஒழுகும் அவலம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் பல டவுன்பஸ்கள், மழைக்கு ஒழுகுவதால் பயணிகள் பஸ்சிற்குள்ளேயே குடைபிடித்த படி பயணம் செய்யவேண்டிய அவலநிலை நிலவுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் இரண்டு என 8 அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இவற்றில் 237 டவுன் பஸ்கள், 181 நீண்டதூர பஸ்கள் என மொத்தம் 418 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட டவுன் பஸ்களே இன்று வரை இயக்கப்படுகின்றன.

இவை அனைத்தும் அனுமதிக்கப்பட்ட கால அளவு, பயண தூரத்தை கடந்தும் இயங்குகின்றன. இவற்றில் பல டவுன் பஸ்கள் ஓட்டை, உடைசலாக மாறிவிட்டன. இதனால் மழை காலத்தில் பஸ்சுக்குள் தண்ணீர் ஒழுகும் அவலநிலை நிலவுகிறது. டி.கல்லுப்பட்டியில் இருந்து விருதுநகருக்கு நேற்று அரசு டவுன்பஸ் ஒன்று வந்தது. அப்போது மழை பெய்ததால் பஸ்சுக்குள் தண்ணீர் ஒழுகியது. இதனால் பயணிகள் பஸ்சிற்குள் குடை பிடித்தபடி பயணிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘விருதுநகர் மாவட்டத்தில் இயக்கப்படும் பல டவுன் பஸ்கள் இருக்கைகள் உடைந்த நிலையிலும், பக்கவாட்டு கண்ணாடிகள் இன்றியும் இயங்குகின்றன. 10 ஆண்டுகளில்ற நீண்டதூர பேருந்துகள் மட்டும் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. டவுன் பஸ்கள் கால அளவை கடந்தும் ஓடுகின்றன. இவற்றில் மேற்கூரை உடைந்திருப்பதால் வெயில் அடித்தால் பயணிகள் மீது வெயில் விழுகிறது.

மழை பெய்தால் தண்ணீர் ஒழுகுகிறது. மழைகாலத்தில், விருதுநகரில் டவுன்பஸ்சில் பயணிக்கவேண்டும் என்றாலே குடையுடன்தான் வர வேண்டியுள்ளது. கட்டணத்தை மட்டும் தாறுமாறாக உயர்த்தும் தமிழக அரசு, தரமான பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories:

>